ஞாயிறு, 22 ஜூலை, 2012

மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை 48 ஆவது ஆண்டு முப்பெரும் விழா

         திருவள்ளுவராண்டு 2043 கடகம் 6ஆம் நாள் 21.07.2012 காரிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு புதுக்கோட்டை சாந்தநாதபுரம் எஸ்.வி.எஸ். சீதையம்மாள் திருமண அரங்கில்  மணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளையின் 48 ஆவது ஆண்டு முப்பெரும் விழா, மன்றச் செயலாளர் திரு சிதம்பர ஈசுவரன் அவர்களின் இன்னிசை நிகழ்வோடு தொடங்கியது.  

     தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து,   முப்பெரும் விழாவின் முதல் நிகழ்வாக மாணவச் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா, மன்றத் தலைவர் ஓய்வு பெற்ற பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது. குழந்தைகள் நல மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் முன்னிலையேற்றார். மன்ற உறுப்பினர்கள் அறிமுகத்தை அமைப்பின் நிறுவனர் புலவர் பொன்.கருப்பையா நிகழ்த்தினார். மன்றத் துணைத் தலைவர் புலவர் மு.பா அவர்கள் வரவேற்புரையாற்றினார். மன்றத்தின் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தர் அவர்கள் ஆண்டறிக்கையினை அழகுற வழங்கினார். 
       முப்பெரும் விழா நிகழ்வுகளை தேசியக் கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்கள் நிரல்பட நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார்.
மாணவச் சாதனையாளர்களில் முதலாவதாக, செந்தூரான் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் நான்காமாண்டு மாணவர், காரைக்குடியைச் சேர்ந்த சீ.மதுசூதனனின் நடக்க இயலாதோர்க்கு உதவும் மின் நடைப்பொறி உருவாக்கிய சாதனை பற்றி நா.செந்தில்பாண்டியன் அறிமுகம் செய்தார். அறிமுகத்தைத் தொடர்ந்து அவர் கண்டுபிடித்த விலை குறைவான எளிய மின் நடைப் பொறி செயல்படும் விதம் பற்றி மதுசூதனன் மேடையில் செயல் விளக்கம் செய்து பார்வையாளர்களின் பாராட்டினைப் பெற்றார். அவரது சாதனையைப் பாராட்டி அமைப்பின் சார்பான சான்றிதழ் மற்றும் சாதனை விருதினை , 50 ஆண்டு பொன்விழாக் கல்விச் சாதனை நிகழ்த்திய சுபபாரதி கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் வீ.வைத்திய நாதன் அவர்கள்  வழங்கிப் பாராட்டினார். விருது பெற்ற மதுசூதனனின் முயற்சியினை, மருத்துவர் இராமதாசு, யோகா மனவளக்கலை மன்ற இயக்குநர் திரு செல்வராசு ஆகியோர்  புகழ்ந்து பேசினர். 
             அடுத்த சாதனையாளரான  மருத்துவர் கி.செந்தில்ராஜ் அவர்களை மன்ற உறுப்பினர்  கவிஞர் ரெ.சு.காசிநாதன் அவர்கள் அறிமுகம் செய்தார். மருத்துவக் கல்விமுடித்து  தமிழ்நாடு தேர்வாணையக் குழு நடத்திய தேர்வில் வென்று, தேவகோட்டை நகர்நல அலுவராகப் பணிபுரிந்து கொண்டே சமூகச் சேவை செய்ய விரும்பி நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்திய ஆட்சிப் பணித் தேர்வினை எழுதி, இந்திய அளவில் 57 ஆவது இடத்தையும், தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்ற சாதனையாளர் செந்தில்ராஜ் அவர்களுக்குச் சாதனை விருது வழங்கப் பட்டது. 

              அவர்களின் சாதனையை வாழ்த்திப் பேசிய, சாகித்திய அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் இத்தகு சாதனை இளைஞர்கள் பெருகி, வளரும் இளைய தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக விளங்குவதன் மூலம்  இந்தியத் திருநாட்டின் வளர்ச்சி பெருகும் என்பதை சான்றுகாட்டி வாழ்த்தினார்.

          விழாவின் இரண்டாவது நிகழ்வான முதல்மாணவர் விருது வழங்கும் விழாவிற்குப்  புதுக்கோட்டை வர்த்தகர் கழகத்தின் மாவட்டத் தலைவர் அறமனச் செம்மல் திரு சீனு.சின்னப்பா அவர்கள் முன்னிலையேற்றார்.
கடந்த கல்வியாண்டில் 10,12 வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை மரகதவள்ளி அறக்கட்டளையின் பொறுப்பாளர் திரு பொன்.க மதிவாணன் அவர்கள் அறிமுகம் செய்ய , புதுக்கோட்டை நகர அளவில் உள்ள அனைத்துப் பள்ளி முதல் மாணவர்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி கு.பார்வதி அவர்கள்  “முதல் மாணவர் விருது“ களை வழங்கிப் பாராட்டுரை வழங்கினார்.அவர் தனது உரையில் ,பெற்றோர், ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால்தான்  இத்தகு சாதனையாளர்கள் பெருகி வருகிறார்கள் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து கல்வியாளர் திரு ச.சிவாஜி அவர்கள், மாணவர்களின் ஒழுக்கத்தோடு கூடிய கல்வி அவர்களை சமூகத்தில் உயர்ந்தவர்களாக்கும் எனக் கூறினார். முன்னிலையேற்ற சீனு.சின்னப்பா அவர்கள் இன்றைய விருது பெறும் மாணவர்கள் எதிர்கால மாணவச் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

          மூன்றாவது நிகழ்வான முழுத்தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கான விருது வழங்கும் விழாவிற்குப் புதுக்கோட்டை மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திரு சண்முக பழனியப்பன் அவர்கள் முன்னிலையேற்றார். புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 10,12 அரசுப்  பொதுத் தேர்வுகளில்  முழுத்தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை மன்றத் துணைச் செயலாளர் கவிஞர் ஆர்.நீலா அவர்கள் அறிமுகம் செய்தார். முழுத்தேர்ச்சி பெறக் காரணமான தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளித் தாளாளர்களின் முயற்சியைப் பாராட்டி அப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு “முழுத்தேர்ச்சிப் பள்ளி விருதுகளை” மா.மன்னர் கல்லூரி முதல்வர் முனைவர் சிவ.கார்த்திகேயன் அவர்கள் வழங்கினார். அவர் தனது உரையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முயன்றால் தனியார் பள்ளித் தேர்ச்சி விழுக்காட்டினை விஞ்சி நிற்கலாம் எனக் குறிப்பிட்டார். ஆசிரியர்களின் கல்விப் பணியின் மாண்புகளை,  வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் சிறப்பித்துப் பேசினார்.அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய புதுக்கோட்டை ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி திரு க.மணிவண்ணன் அவர்கள் தனது உரையில், இத்தகு சாதனையாளர் களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிப் பாராட்டு விழா நடத்தும்  இவ்வமைப்பின் செயல் பாட்டினைப் பெரிதும் பாராட்டினார்..
    
          பாராட்டுகளுக்கு  மாணவர் சாதனையாளர் மருத்துவர் கி.செந்தில்ராஜ், தலைமைஆசிரியர் திருமதி மல்லிகா, பெற்றோர் திரு தருமசேகர் ஆகியோர்  ஏற்புரை நிகழ்த்தினர். 

          மணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளையின் நிருவாகி புலவர் பொன்.கருப்பையா அவர்கள் தனது நன்றி யுரையில் விழா சிறக்க உதவிய அனைத்து அறவோர் செயல்களையும் குறிப்பிட்டு  எதிர்காலத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பள்ளிகளுக்கும்  , அரிய சாதனையாளர்களுக்கும்  இவ்விருது வழங்கும் திட்டத்தை விரிவு படுத்த உள்ளதாகவும்  அதற்குக் கல்வித்துறையும், அறவோரும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுப் பேசினார். 
  
            விழாவிற்குப் புதுக்கோட்டையின் புகழ்மிக்க சான்றோர் பலர் வருகை தந்திருந்தனர். மாவட்ட நுகர்வோர் குழுத் தலைவர் தனவேலு, கவிஞர் மன்றத் தலைவர் கவிஞர் நிலவை பழனியப்பன், இலக்கியப் பேரவைத் தலைவர் மு.முத்து சீனிவாசன், நட்புறவு இயக்கத் தலைவர் திரு முத்துச்சாமி, கவிராசன் இலக்கியப் பேரவை திரு முருகபாரதி, தமிழ்நாடு அறிவியல்இயக்கத் தலைவர் திரு.லெ.பிரபாகரன், பொருளாளர் திரு வீரமுத்து. த.மு.எ.க.ச.மாவட்டச் செயலாளர் திரு ரமா.இராமநாதன், திரு இளங்கோ, பேராசிரியர்கள் சு. மாதவன், முருகையன், அபிராமி கருப்பையா, புலவர் மா.நாகூர், திரைப்பட இயக்குநர் திரு முரளி அப்பாஸ்,  பொன்மாரி கல்வி நிறுவனச் செயலாளர் திரு.இராமுக்கண்ணு, மற்றும், புதுக்கோட்டையின் பல்வேறு இலக்கிய அமைப்பினர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பெற்றோர், மாணவர்கள் என பன்முகத்திரட்டால் அரங்கம் நிறைந்து வழிந்தது.நாட்டுப் பண்ணுடன் விழா இனிது நிறைவுற்றது. 

           வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டியினை உணவக உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் திரு சண்முக பழனியப்பன் அவர்கள் வழங்கி மகிழ்நதார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக