சனி, 21 டிசம்பர், 2013

பாரதியார் வினாடி-வினா சுற்று-4 விடைகள்

பாரதியார் பிறந்தநாள் விழா வினாடி-வினாப்போட்டி சுற்று -4 க்கான விடைகள்.

1. பரலி சு.நெல்லையப்பரால் - சென்னையில் 1917ல்.

2. பாஞ்சாலி சபதம் - விசயன் ( அருச்சுணன் ) வீமனுக்கு உரைத்ததாக.

3. காந்திமதிநாத பிள்ளை.

4. பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு.

5. வீரமிலா நாய்கள் விலங்காமிள வரசன்தன்னை மிதித்துத் தராதரத்திற்ப் போக்கியேப் பொன்னையவள் அந்தப்புரத்தில் சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினர். பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?

6. குயில் பாட்டு.

7. தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன், வெண்ணிலாவில் பாங்கியோடென்று சொன்னாய்.

8.பாரதியாரின் இளையமகள் சகுந்தலாவிற்காக.

9. பாவித் துரியோதனன் செந்நீர் அந்தப்பாழ் துச்சாதனன் ஆக்கை யிரத்தம் மேவியிரண்டும் கலந்து.

10. 1913 அக்தோபர் “ஞானபாநு” இதழில்.

உங்கள் விடைகள் சரிதானே...? வாழ்த்துகள்.

வியாழன், 19 டிசம்பர், 2013

வினாடி-வினா மூன்றாம் சுற்று ( பாரதியார் ) விடைகள்

                             சுற்று - 3 ஞானப்பாடல்கள் - விடைகள்

1. அச்சமே மனிதனை முடக்கும் நோய் என்பதால்.

2. காலனைச் சிறு புல்லாக மதிக்கிறார்.

3. அறிவொன்றே தெய்வம் என்கிறார்.

4. பொருள் அனைத்திலும் ஒன்றாய், அறிவாய் விளங்கும் முதற்சோதியாய் வெளிப்படுத்துகின்றார்.

5. நிற்பது, நடப்பது. பறப்பது.

6. தாயால் உயிர் துணிவுறுவதாகக் கூறுகிறார்.

7. திண்ணிய நெஞ்சம் வேண்டும் என்கிறார்.

8. பகைவனுக்கு அருள்வாய் எனக் கூறுகிறார்.

9. காக்கை குருவி எங்கள் சாதி என்கிறார்.

10 இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்

புதன், 18 டிசம்பர், 2013

பாரதியார் வினாடி-வினா. இரண்டாம் சுற்று -விடைகள்

 இரண்டாம் சுற்று - பாரதியாரின் மொழிப்பற்று.- விடைகள்.

1. சிலப்பதிகாரத்தை.

2. இங்கமரர் சிறப்புக் கண்டார்.

3. கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்க்க.

4. கம்பன், வள்ளுவர், இளங்கோ.

5. கற்றது ஒழுகு.

6. தெருவெலாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

7. அகத்தியர்.

8. நீதிநூல் பயில், வானநூல் பயிற்சிகொள்.

9. உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்.

10. கம்பன் கவியை.

என்ன முழுத் தேர்ச்சிதானே...?

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

வினாடி-வினாப் போட்டி - முதல்சுற்று

                    13.12.13 அன்று மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை, பாரதியாரின் 132 ஆவது பிறந்த நாளினையொட்டி  கல்லூரி மாணவர்களுக்கு ஆறு சுற்றுகளாக  வினாடி-வினாப் போட்டியினை நடத்தியது.
             
                    முதல் சுற்று - பாரதியின் நாட்டுப் பற்றுப்பாடல்கள்.

1.வந்தே மாதரம் என்போம்... இப்பல்லவியின் அடுத்த வரி என்ன?

2. வந்தனைகூறி மனதிலிருத்தி என் வாயுற வாழ்த்தேனோ? இவ்வரி பாரதியாரின் எப்பாடலில் வருகிறது?

3.காவிரி வெற்றிலைக்கு எவற்றை மாறுகொள்வோம் - எனப் பாரதியார் பாடியுள்ளார்?

4. கஞ்சி குடிப்பதற்கில்லார்.....  இதனை அடுத்து வரும் வரி என்ன?

5.எப்போது ஜகத்தினை அழித்திடுவோமெனப் பாரதியார் குமுறுகிறார்?

6. மேவிய ஆறு பலவோடத் திருமேனி செழித்த தமிழ்நாடு... என்றார். என்னென்ன ஆறுகளை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

7.பொழுதெல்ல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டுபோகவோ? இவ்வரிகள் யாரால் யாருக்குச் சொல்லப்பட்டதாகப் பாரதி எழுதியுள்ளார்?

8. ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி, கொடுங்காலன் அலறி வீழ்ந்தான் - எந்தப் புரட்சியினை... யாருடைய வீழ்ச்சியினை இவ்வரிகளில் பாரதி காட்டுகிறார்?

9. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி.... இப்பாடல் எந்தத் தலைப்பில் யாரைப் பழித்துப் பாடப்பட்டது?

10 எவற்றுக்கு வந்தனை செய்ய வேண்டும் ? எவரை நிந்தனை செய்ய வேண்டுமென்கிறார்  பாரதி?

இந்த எளிய வினாக்களுக்குரிய விடைகளை pudugaimanimandram blogspot ல் கண்டு மதிப்புப் பெறுக.

சனி, 14 டிசம்பர், 2013

மகாகவி பாரதியார் 132ஆவது பிறந்தநாள் இலக்கியப் போட்டிகள்

           தி.பி.2044 நளி 27ஆம்நாள் (13.12.2013) வெள்ளிக்கிழமை, புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை மகா கவி பாரதியாரின் 132 ஆவது பிறந்தநாள் இலக்கியப் போட்டிகளை நடத்தியது.

           புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 54 மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

          பாரதியாரின் நாட்டுப்பற்று  மற்றும் மொழிப்பற்றுப் பாடல்களை இசையோடு பாடும் பாட்டுப்போட்டி,

பெண்பாடும் பண்பாடும், மூவர்ணமும் நால்வர்ணமும், பழையசோறும் பாதாம்கீரும் ஆகிய தலைப்புகளில் கவிதை புனைந்து வழங்கும் போட்டி,

       பாரதியாரின் நாட்டுப் பற்றுப் பாடல்கள், மொழிப்பற்றுப்பாடல்கள், ஞானப்பாடல்கள், முப்பெரும் பாடல்கள், பாரதியார் கடந்த பாதை, பல்வகைப்பாடல்கள் ஆகிய ஆறு சுற்றுகளைக் கொண்ட வினாடி-வினாப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

        கவிதைப் போட்டிக்கு புலவர் மா.நாகூர், கவிஞர் ஆர்.நீலா, முனைவர் வீ.கே.கஸ்துர்ரிநாதன், ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர் களைத் தேர்வு செய்தனர்.

       பட்டிமன்றப் பேச்சாளர் வெள்ளைச்சாமி, இளந்திரு கி.அரிமோகன், சிதம்பர.ஈசுவரன் ஆகியோர் பாடல் போட்டிக்கு நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

          பாவலர் பொன்.க மற்றும் கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் வினாடி-வினாப் போட்டியினை நடத்த கவிராசன் இலக்கிய மன்றப் பொறுப்பாளர் க.முருகபாரதி, கவிஞர் மு.கீதா ஆகியோர் மதிப்பீட்டாளர்களாக இருந்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

         கவிதைப் போட்டியில் பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி மாணவர் தர்மசாஸ்தா முதலிடத்தையும், சிறீபாரதி ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவி அ.சங்கீதா இரண்டாமிடத்தையும், மாமன்னர் கல்லூரி மாணவர் க்.அன்பரசு மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

         இசைப்பாடல் போட்டியில் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மாணவி மு.அபர்ணா முதலிடத்தையும், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி ம.வசந்தாதேவி இரண்டாமிடத்தையும், கீரை தமிழ்ச்செல்வன் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவி பாரதிபிரியா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

            வினாடி-வினாப் போட்டியில் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி சா.தாமரைச்செல்வி, வ.தமிழ்ச்செல்வி, ம.மதிமொழி ஆகியோர் குழு முதலிடத்தையும், அதே கல்லூரி பாத்திமாபீவி, மா.கவிதா, மெ.சங்கீதா ஆகியோர் குழு இரண்டாமிடத்தையும், மாமன்னர் கல்லூரி அ.அகல்யா, சீ.லலிதா,மு.அழகு ரேணுகாதேவி ஆகியோர் குழு மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

          போட்டிகள் முடிவுற்றதும் மன்ற நிறுவனர் பாவலர் பொன்.க அவர்கள் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

          வெற்றியாளர்களுக்கு புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள் முருகன் அவர்கள் வாழ்த்துரைத்து மதிப்புள்ள நூல்களைப்  பரிசுகளாக  வழங்கினார், ஆக்ஸ்போர்டு சமையல்கலைக் கல்லூரி முதல்வர் அ.சுரேசு, கவிஞர் மன்றத் தலைவர் நிலவை பழனியப்பன் ஆகியோர் பாராட்டிப் பரிசுகள் வழங்கினர்.

        போட்டி நிகழ்வுகளைமன்றப் பொருளாளர் சுப.இராசேந்திரன், கவிஞர் செ.சுவாதி, அ.குமார், வெ.பரமசிவம் ஆகியோர் ஒருங்கிணைத் திருந்தனர்.

       

மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தர் நன்றியுரையாற்றினார்.


ஞாயிறு, 1 டிசம்பர், 2013

மணிமன்றப் பொன்விழா மலர் - அமைப்புக் கூட்டம்

            30.11.2013 அன்று மாலை  மணிமன்றத்தின் நவம்பர்த் திங்கள் இயல்புக் கூட்டம் , கவிஞர் நா.முத்துநிலவன் நூலகத்தில் பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் கூடியது.

         மன்றத் துணைத் தலைவர் நா.செந்தில்பாண்டியன் வரவேற்புரை யாற்றினார்.

         வேலை அறிக்கையினை நிறுவனர் பாவலர் பொன்.க.அளித்தார்.
அறிக்கையின் மீதான கருத்துப் பகிர்வு நடைபெற்றது.

         23.11.2013 நகர் மன்றத்தி்ல் திருக்குறள் கழக 59 ஆவது ஆண்டுவிழாவில் மணிச்சுடர் கலைக்கூடம் சார்பாக “இவர்கள் இன்று வந்தால் “ என்னும் நடப்பியல் நாடகத்தில் நடித்தவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

        மட்டைப் பந்து விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்து ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர், பாரதரத்னா விருது பெற்ற அறிவியல்  அறிஞர் சி.ஆர்.ராவ் ஆகியோர்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

       கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.

       1. மணிமன்ற பொன்விழா மலர்க்குழு கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் (10 பேர் ) கொண்ட குழு அமைக்கப்பட்டது.

       2.பொன்விழா மலரில் மணிமன்றத்தின் தோற்றம், வளர்ச்சியும் மலர்ச்சியும், மணிமன்ற உறுப்பினர்களின் கலை, இலக்கிய . சமுதாயப் பணிகள், படைப்புகள் , புதுக்கோட்டையின் புகழ்பெற்ற கலைஇலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள், புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புகள்,  சமூக மாற்றத்திற்கான புதுக்கோட்டைப் படைப்பாளிகளின் சிறந்த படைப்புகள், புதுக்கோட்டை கலை இலக்கிய அமைப்புகளின் பார்வையில மணிமன்றம், ஆகிய படைப்புகள் இடம் பெறச்செய்தல்.
கல்விநிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைப் பெற்று  மலரில் வெளியிடுதல்.

       3.பொன்விழா ஆண்டின் தொடக்க நிகழ்வாக சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பரப்புச் செயலாக தமிழர் திருநாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் 50,000 மரக்கன்றுகளை நடுதல்.

      4.மகாகவி பாரதியாரின் 133 ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாட்டுப் போட்டியினை 13.12.2013 அன்று ஆக்ஸபோர்டு சமையல் கல்லூரியில் நடத்துதல் ( தலைப்பு  பாரதியாரின் நாட்டுப்பற்று, மொழிப்பற்றுப் பாடல்கள்)

     மேற்கண்ட முடிவுகளைத் தொடர்ந்து செயலாளர் சிதம்பர ஈசுவரன் நன்றி கூறினார்.
கூட்டத்தில்  கலந்து கொணடவர்கள்