வியாழன், 12 செப்டம்பர், 2013

பாரதியார் நினைவு நாள் வழக்காடு மன்றம்

            11.09.2013 அன்று புதுக்கோட்டை நேஷனல் அகாதமி அரங்கில், மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை ” பாரதியார் கனவு கண்ட சமுதாயம் மலரவில்லை” என்னும் வழக்காடு மன்ற நிகழ்வினை நடத்தியது.

            நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

           மன்றச் செயலாளர் திரு சிதம்பர ஈசுவரன் பாரதியார் பாடலோடு வரவேற்புரையாற்றினார்,இந்நிகழ்வில் மன்ற உறுப்பினர்களே பங்கேற்றனர்.

         வழக்காடு மன்ற நடுவராக முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்கள் இருந்தார். 

          பெண்சமத்துவம், தாய்மொழி, சமதர்ம சமுதாயம் பற்றிப் பாரதியார் கண்ட கனவுகள் நனவாக வில்லை எனக் கவிஞர் மு.கீதா, திரு கோ.வள்ளியப்பன் ஆகியோர் வழக்குத் தொடுத்தனர்.

         புலவர் மகா.சுந்தர், கவிஞர் செ.சுவாதி ஆகியோர் வழக்கினை மறுத்தனர்.
இருசாராரும் பாரதியாரின் கவிதைகளையும் இன்றைய சமுதாய நிகழ்வுகளையும் சான்றுகாட்டி வாதிட்டனர்.

         வழக்கிளை ஆய்வு செய்த நடுவர், பெண்களின் இன்றைய அனைத்துத் துறை முன்னேற்றம், தமிழ்மொழி ஆட்சிமொழி, மருத்துவ, வழக்காடுமன்ற கணினி  மொழியாக வளர்ந்திருப்பது, சமதர்ம வளர்ச்சி இவற்றை ஒப்புநோக்கி, பாரதியார் கண்ட கனவு நனவாகி வருகிறது எனத் தீர்ப்பளித்து வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

        நிகழ்ச்சிக்கு வருகைதந்த சிறப்பு அழைப்பாளர்கள் கவிஞர் நா.முத்துநிலவன், திருவருள் பேரவைத் தலைவர் இரா.சம்பத்குமார் , எழுத்தாளர் கிருஷ்ணவரதராசன் ஆகியோர் வழக்காடு மன்றம் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்து வழக்காடு மன்றத்தில்
பங்கேற்றவர்களுக்கு நூல்களைப் பரிசாக வழங்கிச் சிறப்பித்தார்கள்.

        நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்த மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் நன்றி கூறினார்.

        தொடர் மழையிலும், நிகழ்ச்சிக்கு மணிமன்ற உறுப்பினர்கள் நா.செந்தில்பாண்டியன், கவிஞர் கண்ணதாசன் , மணிகண்டன் ஆகியோரோடு, முத்துப் பாண்டியன், நண்பா அறக்கட்டளை கார்த்திக், நேஷனல் அகாதமி நாகரெத்தினம் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் வருகை தந்தது சிறப்பு.

       மணிமன்றப் பொன்விழா ஆண்டின் தொடக்க நிகழ்வு ஒரு பொது நிகழ்வாக நடந்தது குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்வின் போது கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் மன்ற உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டது  மன்றத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும்.  

2 கருத்துகள்:

  1. மன்றத்தில் இணைந்த அய்யாவிற்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  2. மன்றக்கூட்டததிலேயே சொன்னதை இங்கும் பதிவிடுவது தவறல்ல- இதுவரை நான் உறுப்பினராவிருந்த, இருக்கும் ஒரே இலக்கிய அமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்தான். இப்போது மணிமன்றத்தில் இணையக் காரணம், எனது வாழ்நாள் கொள்கைகளுக்கேற்ப சமூகப்பார்வையுடன் கூடிய கல்வி,கலைஇலக்கியம் மற்றும் இயக்க நடவடிக்கைகள் வழியாகஎன்னை ஈர்த்ததுதான். இணைந்து தொடர்வோம் .வணக்கம்

    பதிலளிநீக்கு