சனி, 21 டிசம்பர், 2013

பாரதியார் வினாடி-வினா சுற்று-4 விடைகள்

பாரதியார் பிறந்தநாள் விழா வினாடி-வினாப்போட்டி சுற்று -4 க்கான விடைகள்.

1. பரலி சு.நெல்லையப்பரால் - சென்னையில் 1917ல்.

2. பாஞ்சாலி சபதம் - விசயன் ( அருச்சுணன் ) வீமனுக்கு உரைத்ததாக.

3. காந்திமதிநாத பிள்ளை.

4. பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு.

5. வீரமிலா நாய்கள் விலங்காமிள வரசன்தன்னை மிதித்துத் தராதரத்திற்ப் போக்கியேப் பொன்னையவள் அந்தப்புரத்தில் சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினர். பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?

6. குயில் பாட்டு.

7. தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன், வெண்ணிலாவில் பாங்கியோடென்று சொன்னாய்.

8.பாரதியாரின் இளையமகள் சகுந்தலாவிற்காக.

9. பாவித் துரியோதனன் செந்நீர் அந்தப்பாழ் துச்சாதனன் ஆக்கை யிரத்தம் மேவியிரண்டும் கலந்து.

10. 1913 அக்தோபர் “ஞானபாநு” இதழில்.

உங்கள் விடைகள் சரிதானே...? வாழ்த்துகள்.

வியாழன், 19 டிசம்பர், 2013

வினாடி-வினா மூன்றாம் சுற்று ( பாரதியார் ) விடைகள்

                             சுற்று - 3 ஞானப்பாடல்கள் - விடைகள்

1. அச்சமே மனிதனை முடக்கும் நோய் என்பதால்.

2. காலனைச் சிறு புல்லாக மதிக்கிறார்.

3. அறிவொன்றே தெய்வம் என்கிறார்.

4. பொருள் அனைத்திலும் ஒன்றாய், அறிவாய் விளங்கும் முதற்சோதியாய் வெளிப்படுத்துகின்றார்.

5. நிற்பது, நடப்பது. பறப்பது.

6. தாயால் உயிர் துணிவுறுவதாகக் கூறுகிறார்.

7. திண்ணிய நெஞ்சம் வேண்டும் என்கிறார்.

8. பகைவனுக்கு அருள்வாய் எனக் கூறுகிறார்.

9. காக்கை குருவி எங்கள் சாதி என்கிறார்.

10 இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்

புதன், 18 டிசம்பர், 2013

பாரதியார் வினாடி-வினா. இரண்டாம் சுற்று -விடைகள்

 இரண்டாம் சுற்று - பாரதியாரின் மொழிப்பற்று.- விடைகள்.

1. சிலப்பதிகாரத்தை.

2. இங்கமரர் சிறப்புக் கண்டார்.

3. கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்க்க.

4. கம்பன், வள்ளுவர், இளங்கோ.

5. கற்றது ஒழுகு.

6. தெருவெலாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

7. அகத்தியர்.

8. நீதிநூல் பயில், வானநூல் பயிற்சிகொள்.

9. உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்.

10. கம்பன் கவியை.

என்ன முழுத் தேர்ச்சிதானே...?

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

வினாடி-வினாப் போட்டி - முதல்சுற்று

                    13.12.13 அன்று மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை, பாரதியாரின் 132 ஆவது பிறந்த நாளினையொட்டி  கல்லூரி மாணவர்களுக்கு ஆறு சுற்றுகளாக  வினாடி-வினாப் போட்டியினை நடத்தியது.
             
                    முதல் சுற்று - பாரதியின் நாட்டுப் பற்றுப்பாடல்கள்.

1.வந்தே மாதரம் என்போம்... இப்பல்லவியின் அடுத்த வரி என்ன?

2. வந்தனைகூறி மனதிலிருத்தி என் வாயுற வாழ்த்தேனோ? இவ்வரி பாரதியாரின் எப்பாடலில் வருகிறது?

3.காவிரி வெற்றிலைக்கு எவற்றை மாறுகொள்வோம் - எனப் பாரதியார் பாடியுள்ளார்?

4. கஞ்சி குடிப்பதற்கில்லார்.....  இதனை அடுத்து வரும் வரி என்ன?

5.எப்போது ஜகத்தினை அழித்திடுவோமெனப் பாரதியார் குமுறுகிறார்?

6. மேவிய ஆறு பலவோடத் திருமேனி செழித்த தமிழ்நாடு... என்றார். என்னென்ன ஆறுகளை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

7.பொழுதெல்ல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டுபோகவோ? இவ்வரிகள் யாரால் யாருக்குச் சொல்லப்பட்டதாகப் பாரதி எழுதியுள்ளார்?

8. ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி, கொடுங்காலன் அலறி வீழ்ந்தான் - எந்தப் புரட்சியினை... யாருடைய வீழ்ச்சியினை இவ்வரிகளில் பாரதி காட்டுகிறார்?

9. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி.... இப்பாடல் எந்தத் தலைப்பில் யாரைப் பழித்துப் பாடப்பட்டது?

10 எவற்றுக்கு வந்தனை செய்ய வேண்டும் ? எவரை நிந்தனை செய்ய வேண்டுமென்கிறார்  பாரதி?

இந்த எளிய வினாக்களுக்குரிய விடைகளை pudugaimanimandram blogspot ல் கண்டு மதிப்புப் பெறுக.

சனி, 14 டிசம்பர், 2013

மகாகவி பாரதியார் 132ஆவது பிறந்தநாள் இலக்கியப் போட்டிகள்

           தி.பி.2044 நளி 27ஆம்நாள் (13.12.2013) வெள்ளிக்கிழமை, புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை மகா கவி பாரதியாரின் 132 ஆவது பிறந்தநாள் இலக்கியப் போட்டிகளை நடத்தியது.

           புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 54 மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

          பாரதியாரின் நாட்டுப்பற்று  மற்றும் மொழிப்பற்றுப் பாடல்களை இசையோடு பாடும் பாட்டுப்போட்டி,

பெண்பாடும் பண்பாடும், மூவர்ணமும் நால்வர்ணமும், பழையசோறும் பாதாம்கீரும் ஆகிய தலைப்புகளில் கவிதை புனைந்து வழங்கும் போட்டி,

       பாரதியாரின் நாட்டுப் பற்றுப் பாடல்கள், மொழிப்பற்றுப்பாடல்கள், ஞானப்பாடல்கள், முப்பெரும் பாடல்கள், பாரதியார் கடந்த பாதை, பல்வகைப்பாடல்கள் ஆகிய ஆறு சுற்றுகளைக் கொண்ட வினாடி-வினாப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

        கவிதைப் போட்டிக்கு புலவர் மா.நாகூர், கவிஞர் ஆர்.நீலா, முனைவர் வீ.கே.கஸ்துர்ரிநாதன், ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர் களைத் தேர்வு செய்தனர்.

       பட்டிமன்றப் பேச்சாளர் வெள்ளைச்சாமி, இளந்திரு கி.அரிமோகன், சிதம்பர.ஈசுவரன் ஆகியோர் பாடல் போட்டிக்கு நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

          பாவலர் பொன்.க மற்றும் கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் வினாடி-வினாப் போட்டியினை நடத்த கவிராசன் இலக்கிய மன்றப் பொறுப்பாளர் க.முருகபாரதி, கவிஞர் மு.கீதா ஆகியோர் மதிப்பீட்டாளர்களாக இருந்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

         கவிதைப் போட்டியில் பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி மாணவர் தர்மசாஸ்தா முதலிடத்தையும், சிறீபாரதி ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவி அ.சங்கீதா இரண்டாமிடத்தையும், மாமன்னர் கல்லூரி மாணவர் க்.அன்பரசு மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

         இசைப்பாடல் போட்டியில் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மாணவி மு.அபர்ணா முதலிடத்தையும், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி ம.வசந்தாதேவி இரண்டாமிடத்தையும், கீரை தமிழ்ச்செல்வன் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவி பாரதிபிரியா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

            வினாடி-வினாப் போட்டியில் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி சா.தாமரைச்செல்வி, வ.தமிழ்ச்செல்வி, ம.மதிமொழி ஆகியோர் குழு முதலிடத்தையும், அதே கல்லூரி பாத்திமாபீவி, மா.கவிதா, மெ.சங்கீதா ஆகியோர் குழு இரண்டாமிடத்தையும், மாமன்னர் கல்லூரி அ.அகல்யா, சீ.லலிதா,மு.அழகு ரேணுகாதேவி ஆகியோர் குழு மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

          போட்டிகள் முடிவுற்றதும் மன்ற நிறுவனர் பாவலர் பொன்.க அவர்கள் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

          வெற்றியாளர்களுக்கு புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள் முருகன் அவர்கள் வாழ்த்துரைத்து மதிப்புள்ள நூல்களைப்  பரிசுகளாக  வழங்கினார், ஆக்ஸ்போர்டு சமையல்கலைக் கல்லூரி முதல்வர் அ.சுரேசு, கவிஞர் மன்றத் தலைவர் நிலவை பழனியப்பன் ஆகியோர் பாராட்டிப் பரிசுகள் வழங்கினர்.

        போட்டி நிகழ்வுகளைமன்றப் பொருளாளர் சுப.இராசேந்திரன், கவிஞர் செ.சுவாதி, அ.குமார், வெ.பரமசிவம் ஆகியோர் ஒருங்கிணைத் திருந்தனர்.

       

மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தர் நன்றியுரையாற்றினார்.


ஞாயிறு, 1 டிசம்பர், 2013

மணிமன்றப் பொன்விழா மலர் - அமைப்புக் கூட்டம்

            30.11.2013 அன்று மாலை  மணிமன்றத்தின் நவம்பர்த் திங்கள் இயல்புக் கூட்டம் , கவிஞர் நா.முத்துநிலவன் நூலகத்தில் பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் கூடியது.

         மன்றத் துணைத் தலைவர் நா.செந்தில்பாண்டியன் வரவேற்புரை யாற்றினார்.

         வேலை அறிக்கையினை நிறுவனர் பாவலர் பொன்.க.அளித்தார்.
அறிக்கையின் மீதான கருத்துப் பகிர்வு நடைபெற்றது.

         23.11.2013 நகர் மன்றத்தி்ல் திருக்குறள் கழக 59 ஆவது ஆண்டுவிழாவில் மணிச்சுடர் கலைக்கூடம் சார்பாக “இவர்கள் இன்று வந்தால் “ என்னும் நடப்பியல் நாடகத்தில் நடித்தவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

        மட்டைப் பந்து விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்து ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர், பாரதரத்னா விருது பெற்ற அறிவியல்  அறிஞர் சி.ஆர்.ராவ் ஆகியோர்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

       கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.

       1. மணிமன்ற பொன்விழா மலர்க்குழு கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் (10 பேர் ) கொண்ட குழு அமைக்கப்பட்டது.

       2.பொன்விழா மலரில் மணிமன்றத்தின் தோற்றம், வளர்ச்சியும் மலர்ச்சியும், மணிமன்ற உறுப்பினர்களின் கலை, இலக்கிய . சமுதாயப் பணிகள், படைப்புகள் , புதுக்கோட்டையின் புகழ்பெற்ற கலைஇலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள், புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புகள்,  சமூக மாற்றத்திற்கான புதுக்கோட்டைப் படைப்பாளிகளின் சிறந்த படைப்புகள், புதுக்கோட்டை கலை இலக்கிய அமைப்புகளின் பார்வையில மணிமன்றம், ஆகிய படைப்புகள் இடம் பெறச்செய்தல்.
கல்விநிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைப் பெற்று  மலரில் வெளியிடுதல்.

       3.பொன்விழா ஆண்டின் தொடக்க நிகழ்வாக சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பரப்புச் செயலாக தமிழர் திருநாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் 50,000 மரக்கன்றுகளை நடுதல்.

      4.மகாகவி பாரதியாரின் 133 ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாட்டுப் போட்டியினை 13.12.2013 அன்று ஆக்ஸபோர்டு சமையல் கல்லூரியில் நடத்துதல் ( தலைப்பு  பாரதியாரின் நாட்டுப்பற்று, மொழிப்பற்றுப் பாடல்கள்)

     மேற்கண்ட முடிவுகளைத் தொடர்ந்து செயலாளர் சிதம்பர ஈசுவரன் நன்றி கூறினார்.
கூட்டத்தில்  கலந்து கொணடவர்கள்

வியாழன், 28 நவம்பர், 2013

இவர்கள் இன்று வந்தால்..!!!

                 புதுக்கோட்டை நகர் மன்றத்தில் 23.11.2013 அன்று நடந்த  திருக்குறள் கழக 59ஆவது ஆண்டுவிழாவில் புதுக்கோட்டை மணிமன்றத்தின் கலைப்பிரிவாகிய மணிச்சுடர் கலைக்கூடம் “இவர்கள் இன்று வந்தால்...!!!? “ என்னும் நடப்பியல் நாடகத்தை நடத்தியது.

                பாவலர் பொன்.கருப்பையா எழுதி இயக்கிய இந்த நாடகத்தில்  திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் ஆகியோர் இன்று வந்தால் இன்றைய சமுதாயத்தின் அவலங்கள் பற்றி என்ன சொல்வார்கள் என்பது பற்றி நகைச்சுவையுடனான  ஓரரங்கக் காட்சி அரங்கேறியது.

                தாய்மொழி வழிக்கல்வி சிதைப்பு, அந்நிய மோகம், பெண்ணடிமைத்தனம், அயலகங்களில் தமிழினப் பாதிப்பு, அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுப்பு, இல்வாழ்க்கையின் இடர்கள் முதலியன பற்றிய இன்றைய நிலையும் அன்றைய அவர்களின் கருத்தும் நகைச்சுவையோடான  நடிப்புரையாடல் மூலம் பார்வை யாளர்களுக்கு வழங்கப்பட்டது.

               திருவள்ளுவராக பொன்.க.மதிவாணன், பாரதிதாசனாக கோ.வள்ளியப்பன், பாரதியாராக புலவர் மகா.சுந்தர்  மாங்காட்டுக் கூத்தனாக சிதம்பர ஈசுவரன், நல்லமுத்துவாக இராச.செய்சங்கர் ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.

            தோற்றப் பொலிவிலும் உரையாடலிலும், நடிப்பிலும் ஒருவரையொருவர் விஞ்சி நின்றனர்.   இசையமைப்பினை இராசசேகர் செய்திருந்தார்.

              35 நிமிடங்கள் காட்சி மாற்றமில்லாமல் தொடர்ந்து நடந்த இந்நாடகம் பார்வை யாளர்களால் மிகவும் பாராட்டப் பட்டது.

             சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்திருந்த  முனைவர் மறைமலை இலக்குவனார் இயக்குநரையும் பங்கேற்றவர்களையும் பாராட்டி ஆடை போர்த்திச் சிறப்பித்தார்.

            ஊடகவியலார் அய்யநாதன், பொறிஞர்  விடுதலை வேந்தன் , விருது பெற்ற முனைவர் திராவிடமணி, மருத்துவர் ச.இராமதாசு, அறமனச் செம்மல் சீனு சின்னப்பா, ஆலங்குடி இராமச்சந்திரன் செட்டியார், முத்துசீனிவாசன், கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலவன்ஆகியோர் பாராட்டினர்.

             கவிஞர் முத்துப் பாண்டி, வேதையன் மற்றும் புதுக்கோட்டை இலக்கிய அமைப்பினர், த.மு.எ.க.ச. வினர், மணிமன்றத் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் சுப.இராசேந்திரன், உறுப்பினர்கள் ஆ.செல்வராசு, கவிஞர் மு.கீதா, கவிஞர் செ.சுவாதி, வெ.பரமசிவம், கவிஞர் மா.கண்ணதாசன், இளங்கோ, தமிழ்மணி ஆகியோர் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள்.

            ஒலி ஒளி அமைப்பினை சாந்தி ஒலியகத்தார் சிறப்பாகச் செய்திருந்தனர்.

            காணொளிப் பதிவினை மதி.பிறைநுதல்செல்வி செய்திருந்தார். ஒளிப்படப் பதிவினை டீலக்சு சேகர் செய்திருந்தார்.

பொன்விழா ஆண்டை நோக்கிய மணிமன்றப் பயணத்தில் இந்நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்கப் பதிவாக அமைந்தது.

புதன், 30 அக்டோபர், 2013

இன்றைய நாள்

1 .உலகம் முழுமையிலும் மனிதநேயமும் சமாதானமும் மலர, செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவரும், ஜெனீவா ஒப்பந்தம் உருவாகக் காரணமாக இருந்தவருமான, ஜீன் ஹென்றி டுணான்ட் அவர்களின் நினைவுநாள் இன்று.

2. இயற்கையை தன் இறக்கைகளால் காத்துவரும் பல்லுயிர்க் காரணிகளான பறவைகள் நாள் இன்று. 

3. அந்நிய நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கி அன்றாடம் வாழ்க்கைப் போராட்டத்தில்  அடுத்த வேளை உணவுக்கு வழியின்றித் தவிக்கும் 63 விழுக்காடு மக்களுக்கு “அடுத்தவர்க்காகக் கடன் வாங்கியாவது கொண்டாடு தீபாவளியை... அதற்குப்பிறகு  ஆண்டு முழுவதும் திண்டாடு ... எனப் புளிச்சேப்ப ஆதிக்க வர்க்கம் பசிஏப்பக் காரர்களுக்கு உபதேசம்  செய்யும் “உலகச் சிக்கன நாள் ” இன்று. 
அடுத்த வீட்டுக்காரன் அவல் இடித்தால்... அவனுக்குப் போட்டியாகப் புளியங்கொட்டையையாவது  இடிக்க வேண்டுமெனப் புலியைப் பார்த்துச் சூடு போட்டுக்கொள்ளும் புனைகளாய் ஆகிப்போனோமே. என்று தணியும் ....?


மணிமன்றம்- பொன்விழா ஆண்டு திட்டமிடல் கூட்டம்

மணிமன்றத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாடுதல் பற்றி 29.10.2013 அன்று நேசனல் அகாதமியில் நடைபெற்ற திட்டமிடல் கூட்டத்தில் கலந்து கொண்ட கவிஞர் நா.முத்துநிலவன், நிறுவனர் பாவலர் பொன்.க , கவிஞர் ரெ.சு.காசிநாதன், புலவர் மகா.சுந்தர், மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் மகளிர் அணி இரா.நாகலெட்சுமி, கவிஞர்கள் மு.கீதா, செ.சுவாதி ஆகியோர்..

மணிமன்றம் - பொன்விழா ஆண்டு-செயல்திட்ட முன்வரைவு.


               29.10.2013 அன்று புதுக்கோட்டை நேசனல் அகாதமி அரங்கில் மணிமன்றம்- மரகதவள்ளி அறக்கட்டளையின் சிறப்புக் கூட்டம் மன்றத் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.

            மன்றத் துணைத்தலைவர் நா.செந்தில பாண்டியன் வரவேற்புரையாற்றினார்.
துணைச் செயலாளர் மகா.சுந்தர் வேலை அறிக்கை வழங்கினார்.

          கடந்த கூட்டத்திற்குப் பின்னர் மன்றத்தின் செயல்பாடுகள், மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்வுகள், பெற்ற சிறப்புகள் அறிக்கையில் அளிக்கப் பட்டது. உறுப்பினர்கள் கருத்துப் பகிர்விற்குப்பின்னர் அறிக்கை ஒப்புதலளிக்கப் பட்டது.

          மன்றப் பொருளார் சு.இராசேந்திரன் மன்றத்தின் நிதிநிலை அறிக்கையினை அளிக்க அவையினரால் ஒப்புதல் பெறப்பட்டது.

          மன்றத்தின் முதல் கூட்டப் பொருளாக, புதுக்கோட்டை திருக்குறள் கழகம் நவம்பர் 23ஆம் நாள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்த உள்ள அவ்வமைப்பின் 59 ஆவது ஆண்டுவிழாவில் மணிச்சுடர் கலைக் கூடத்தின் நாடகம் நடத்தக் கோரிய வேண்டுகோள் பற்றிய உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. ஒப்பனை, இசை, ஒலியமைப்புச் செலவினங்களை திருக்குறள் கழகம் முழுமையாக ஏற்றுக் கொண்டு உரிய காலம் ஒதுக்கித் தர இசைவு தந்தால் ” இவர்களும் இன்றும்” என்னும் இலக்கியச் சார்பு குறுநாடகத்தினை நடத்துவது என்றும் அந்நாடகத்தில் ஏற்கனவே பங்கேற்றவர்களுடன் ஒரு மகளிர் பாத்திரம் படைத்து அதில் மன்ற மகளிர் ஒருவர் பங்கேற்பது எனவும் முடிவாற்றப் பட்டது.

          அடுத்ததாக மணிமன்றத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா நிகழ்வினைச் சிறப்பாகக் கொண்டாடுவது பற்றி மன்ற உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப் பட்டது.
மன்ற உறுப்பினர்கள் அளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.

1. மணிமன்றத்தின் பொன்விழாவினை 2014 ஜுலை அல்லது ஆகச்டுத் திங்களில், இரண்டு அல்லது மூன்றுநாள் விழாவாக் கொண்டாடுவது.

2.  விழாவில் வழக்கமான முதல் மாணவர் விருது, முழுத்தேர்ச்சிப் பள்ளி விருது, அறிவியல் சாதனையாளர் விருதுகளோடு., சமுதாய மாற்றங்களுக்குச் சிறந்த பங்களிப்பாளர்களுக்குச் சமூகச் சாதனையாளர் விருதும் வழங்குவது.( அதிகமுறை குருதிக்கொடையளித்தோர், உடல், உடலுறுப்புக் கொடையாளர், விழிக்கொடையாளர்)

3.  விழாவில் இயல்,இசை, நாடக முக்கூறுகளை உள்ளடக்கிய, இளைஞர் இலக்கிய விழா, மக்களியக்க விழா, கலைவிழா என்னும் நிரலில் விழாவினை நடத்துவது.

4. மணிமன்ற ஐம்பதாவது ஆண்டுவிழாவில் “பொன்விழா மலர்“ வெளியிடுவது.
அம்மலரில் மன்றத்தின் உறுப்பினர்களின் படைப்புகள் ( சிறுகதை, கவிதை, நாடகம், நகைச்சுவை முதலியன), மணிமன்ற வரலாறு, கடந்துவந்த பாதை, ஆற்றிய சாதனைகள், மன்ற உறுப்பினர்களின் செயற்கரிய செயல்பதிவுகள்,படைப்பாளர்  மற்றும் நிகழ்வுச் சான்று ஒளிப்படங்களுடன் இடம்பெறச்செய்தல்.

    மலருக்கு  வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் பெறுதல். 

5. பொன்விழாவில் புகழ்மிக்க முத்தமிழ் வித்தகர்களைச் சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பது.

6. நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சி, வானொலி ஊடகவியலாரை அழைத்தல்.

இவை தவிர தொடர் நிகழ்வுகளாக...

7.  2014 சனவரித்திங்கள் முதல் புதுக்கோட்டை கல்வி நிறுவனங்களில் மன்றத்தின் சார்பாக தமிழகக் கலை மற்றுதட  பண்பாட்டினை வளர்க்கும் விழி்ப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி மாணவர்களைப் பங்கேற்கச் செய்தல். படைப்பாற்றல் வளர்த்தல்.

 ( கிராமியக் கலைகள், நாடகப் பயிற்சிப் பட்டறை, தாய்மொழி மேம்பாட்டுத் திறன் வெளிப்பாடுப் போட்டிகள் முதலான )

8.  ஊரக அண்மைக் கிராமங்களில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்.

 (சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வருமுன் காப்போம், நமதுநலம் நமது கையில், நீர்ச் சிக்கனமும் சேமிப்பும், மதுவின் கேடுகள் - பற்றிய கலைநிகழ்ச்சிகள் . இசை,தெருமுனை நாடகம், துண்டறிக்கைகள், காணொலிக் காட்சிகள் மூலம் )

9. 2014 சனவரி முதல் 2014 சூன் திங்களுக்குள் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில், கல்வி நிறுவனங்களில 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல்.

மேற்கண்ட முடிவுகளைத் தொடர்ந்து, பொன்விழா மலர்க்குழு அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்பாளராகக் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களை இப்பொதுக்குழு முன் நிறுத்துகிறது. அடுத்த கூட்டத்தில் குழுக்கள் இறுதி செய்யப்படும்.

நிறைவாக உறுப்பினர் கோ.வள்ளியப்பன் அவர்கள் நன்றி கூறக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

மன்ற உறுப்பினர்கள் தங்கள் படைப்புகளை, தங்களது ஒளிப்படம் மற்றும் அறிமுகக் குறிப்புகளுடன்  நா.முத்துநிலவன் , 96, சீனிவாச நகர், 3ஆம் வீதி, மச்சுவாடி, புதுக்கோட்டை என்ற முகவரிக்கோ, muthunilavanpdk@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பிடக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும் தொடர்பிற்கு பாவலர் பொன்.க.9442211096, நா.முத்துநிலவன்  9443193293 .

வியாழன், 12 செப்டம்பர், 2013

பாரதியார் நினைவு நாள் வழக்காடு மன்றம்

            11.09.2013 அன்று புதுக்கோட்டை நேஷனல் அகாதமி அரங்கில், மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை ” பாரதியார் கனவு கண்ட சமுதாயம் மலரவில்லை” என்னும் வழக்காடு மன்ற நிகழ்வினை நடத்தியது.

            நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

           மன்றச் செயலாளர் திரு சிதம்பர ஈசுவரன் பாரதியார் பாடலோடு வரவேற்புரையாற்றினார்,இந்நிகழ்வில் மன்ற உறுப்பினர்களே பங்கேற்றனர்.

         வழக்காடு மன்ற நடுவராக முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்கள் இருந்தார். 

          பெண்சமத்துவம், தாய்மொழி, சமதர்ம சமுதாயம் பற்றிப் பாரதியார் கண்ட கனவுகள் நனவாக வில்லை எனக் கவிஞர் மு.கீதா, திரு கோ.வள்ளியப்பன் ஆகியோர் வழக்குத் தொடுத்தனர்.

         புலவர் மகா.சுந்தர், கவிஞர் செ.சுவாதி ஆகியோர் வழக்கினை மறுத்தனர்.
இருசாராரும் பாரதியாரின் கவிதைகளையும் இன்றைய சமுதாய நிகழ்வுகளையும் சான்றுகாட்டி வாதிட்டனர்.

         வழக்கிளை ஆய்வு செய்த நடுவர், பெண்களின் இன்றைய அனைத்துத் துறை முன்னேற்றம், தமிழ்மொழி ஆட்சிமொழி, மருத்துவ, வழக்காடுமன்ற கணினி  மொழியாக வளர்ந்திருப்பது, சமதர்ம வளர்ச்சி இவற்றை ஒப்புநோக்கி, பாரதியார் கண்ட கனவு நனவாகி வருகிறது எனத் தீர்ப்பளித்து வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

        நிகழ்ச்சிக்கு வருகைதந்த சிறப்பு அழைப்பாளர்கள் கவிஞர் நா.முத்துநிலவன், திருவருள் பேரவைத் தலைவர் இரா.சம்பத்குமார் , எழுத்தாளர் கிருஷ்ணவரதராசன் ஆகியோர் வழக்காடு மன்றம் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்து வழக்காடு மன்றத்தில்
பங்கேற்றவர்களுக்கு நூல்களைப் பரிசாக வழங்கிச் சிறப்பித்தார்கள்.

        நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்த மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் நன்றி கூறினார்.

        தொடர் மழையிலும், நிகழ்ச்சிக்கு மணிமன்ற உறுப்பினர்கள் நா.செந்தில்பாண்டியன், கவிஞர் கண்ணதாசன் , மணிகண்டன் ஆகியோரோடு, முத்துப் பாண்டியன், நண்பா அறக்கட்டளை கார்த்திக், நேஷனல் அகாதமி நாகரெத்தினம் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் வருகை தந்தது சிறப்பு.

       மணிமன்றப் பொன்விழா ஆண்டின் தொடக்க நிகழ்வு ஒரு பொது நிகழ்வாக நடந்தது குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்வின் போது கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் மன்ற உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டது  மன்றத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும்.  

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நன்றி அறிவிப்பு -49

தி.பி.2044 கடகம் 19 ஆம் நாள் ( 04.08.2011 ) நடைபெற்ற மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆம் ஆண்டு முப்பெரும்விழா - நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் .

விழா - 49 நன்றி அறிவிப்புக் கூட்டம்

             புதுக்கோட்டை மணிமன்றம்- மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது ஆண்டு முப்பெரும் விழா தொடர்பான நன்றி அறிவிப்புக் கூட்டம் தி.பி 2044 கடகம் 19 ஆம் நாள்          ( 04.08.2013 ) மாலை மணிமன்றத் தலைவர் திரு.பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் இல்லத்தில் அவர் தலைமையி்ல் நடைபெற்றது. மன்றத் துணைத் தலைவர் திரு நா.செந்தில்பாண்டியன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தின் பொருள் 
                                              1. ஆண்டுவிழா பற்றிய கருத்துப் பகிர்வு
                                              2. நன்றி அறிவிப்பு
                                              3. வரவு செலவு ஒப்புதல்
                                              4. அ.பெ.கா  அமைப்பில் நாடகம்
                     முதலாவதாக 49 ஆவது ஆண்டு முப்பெரும் விழா தொடர்பான உறுப்பினர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

                    மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன், விழா பொதுவாக சிறப்பாக கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக இருந்ததையும், அரங்கேற்றம் செய்யப் பட்ட நாடகம் இன்னும் பயிற்சி அளிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதையும் நிருவனரின் பெருமுயற்சியோடு அனைவரின் கூடுதல் ஒத்துழைப்புத் தேவை என்பதையும் பதிவு  செய்தார்.


                  கவிஞர் மு.கீதா அவர்கள் அரசுப் பள்ளி முதல்மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதும் முழுத்தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டதையும் பாராட்டினார். ஒரு விழா எப்படி நடக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு நடத்தியமை சிறப்பு என்பதையும் பதிவு செய்தார்.


                 கோ.வள்ளியப்பன் தனது கருத்தாக கடந்த ஆண்டினைக் காட்டிலும் அதிகமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் முழுத்தேர்ச்சி அரசுப் பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது சிறப்பு என்பதையும். புதிய கண்டுபிடிப்பு மற்றும் மாணவச் சாதனையாளர்களுக்கு இது போல யாரும் விருதுகள் வழங்கியது இல்லை என்பதையும் பதிவு செய்தார்.


                  கோகர்ணேசன் தனது மாணவப் பருவத்திலிருந்து மன்றத்தின் மூலம் இத்தகு சேவையில் ஈடுபட்டு வருவதையும், தனது குடும்ப மற்றும் தொழில் நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டுகளைப் போல முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க முடியாமைக்கு வருந்தியும் தனக்களி்க்கப்பட்ட அன்றையப் பணிகளை செவ்வனே முடித்தமையையும் கூறினார்.


                  கண்ணதாசன் ,கல்வி மற்றும் சமூக சேவை செய்யும் மன்றத்தின் செயல்களால் ஈர்க்கப் பட்டுத் தானாக இம்மன்றத்தில் இணைந்ததையும், நிருவாகியின் தனித்தமிழ்ப் பற்று மற்றும் விடாமுயற்சியாலும் இது போன்ற சேவையினைத் தொடர்ந்து ஆற்ற முனைவதாகக் கூறினார். விருதுகள் வழங்கிய கைப்பையில் மன்றத்தின் பெயர் பொறித்திருக்கலாம் என்ற ஆலோசனையினையும் பதிவு செய்தார்.


                   இரா.சங்கரநாராயணன் தனது கருத்தாக. இவ்வாண்டு விழாக்களை விட மிகச் சிறப்பாக இருந்ததாக பார்வையாளர்கள் கருதியதைப் பதவு செய்தார். 


                 நா.செந்தில் பாண்டியன் தான் நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகே இம்மன்றத்தில் இணைய முடிந்தது என்பதையும். இணைந்த பின்னர் தனக்களிக்கப்பட்ட எந்தப் பணியையும் தாழ்வின்றிச் செய்து வருவதாகக் கூறினார். மேலும் இத்தகு சேவையினால் பொதுவாழ்க்கையில் தனது செயல்பாட்டில் மதிப்பு மிகுவதாகப் பெருமை கொண்டார். விருது பெற்றவர்கள் தனது பெற்றோர்களுடன் வந்து விருது பெற்றதைப் பெருமையாகக் கருதினர் என்பதைப் பதிவு செய்தார். விழாவில் முதன்மைக் கல்வி அலுவலரின் உரை மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறினார்.


                புலவர் மகா.சுந்தர் கருத்துரைக்கையில் விழாவின் சிறப்பிற்கு ஒலி.ஒளி சிறப்பாக அமைந்தமையைச் சுட்டிக்காட்டினார். முதன்மைக் கல்வி அலுவலர் தனது சொந்த வாழ்க்கைப் பட்டறிவின் மூலம் மாணவர்களுக்குக் கருத்துரைத்தமையையும், அழைத்ததும் வந்து நிறைவுவரை அலுவலர் இருந்து சிறப்பித்ததையும் நெகிழ்வுடன் பதிவு செய்தார். மன்ற பேச்சில்லா நாடகம் இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம் என்பதையும் கருத்தாகச் சொன்னார்.


                மன்ற மூத்த உறுப்பினர் ஆ.செல்வராசு தனது கருத்தாக ஆண்டுக்காண்டு மெருகேறிவரும் மன்றத்தின் செயல் கிராமப்புறப்  பொதுமேடையில் நடத்தப் பட்டால் இன்னும் மன்றத்தின் செயல்பாடுகள் பரவும் என்பதைக் கூறினார்.


              நிறைவாக மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா, இவ்வாண்டு முப்பெரும் விழா சிறப்பாக நடக்க ஒத்துழைத்த அனைத்து மன்ற உறுப்பினர்களுக்கும்,  சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் , முதுநிலை அறிவியலறிஞர் திரு.இரா.இராஜ்குமார். பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்ற உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி, த.மு.எ.க.ச மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்து நிலவன், மருத்துவர் இராமதாசு ஆகியோர்க்கும் , முன்னிலையேற்ற சுப்பிரமணிய காடுவெட்டியார், ஆர் ஏ.குமாரசாமி ஆகியோர்க்கும் , கேளாமலேயே நன்கொடையளித்த பொது நன்கொடை யாளர்களுக்கும், குறிப்பாக ஆண்டுதோறும் கட்டணமில்லாது அரங்கத்தினை வழங்கிவரும் எஸ்.வி.எஸ்.செந்தில் ஆண்டவர், விழாவிற்கு வருகை தந்தவர்க்கெல்லாம் சிற்றுண்டி வழங்கிய திரு சண்முக பழனியப்பன், இனிப்புகள் வழங்கிய அறமனச் செம்மல் சீனு .சின்னப்பா, ரொட்டிகள் வழங்கிய கோடீசுவரா அழகப்பன், விருதுகளுக்கு நிதி யளித்த எஸ.வி.எஸ். செயக்குமார். முரு.வைரமாணிக்கம்,  பரப்புரைக்கு உதவிய வயி.ச.வெங்கடாசலம். மருத்துவர் ச.இராமதாசு, ப.இராமசாமி, ஆர்.ஏ.குமாரசாமி. சுந்தரமூர்த்தி ஆகியோர்க்கும், பொருளாலும், உடலுழைப்பாலும், நிதியாலும் உதவிய மன்ற உறுப்பினர்களுக்கும் ஒளிப்படம் எடுத்த ஸ்டீபன், காணொளிப் பதிவு செய்த மரகதவள்ளி அறக்கட்டளை அறங்காவலர் பொன்.க.மதிவாணன், விருதுபெற்ற மாணவர்கள், பெற்றோர், தலைமையாசிரியர்கள், விழாவிற்கு வந்து சிறப்புச் செய்த புதுக்கோட்டையில் பல்வேறு இலக்கிய , அறிவியல். கலைஇலக்கிய அமைப்பினைச் சேர்ந்தவர்களுக்கும். நிகழ்ச்சியினை நாளேடுகளில் வெளியிட்டு உதவிய நாளேட்டுச் செய்தியாளர்களுக்கும், திருச்சி அகில இந்திய வானொலி, காவல்துறை ஆகியோர்க்கு அமைப்பின் சார்பான நன்றிகளைப் பதிவு செய்தார்.


             அடுத்து வரும் நிகழ்வுகளில் இன்னும் ஆற்றலோடு உறுப்பினர்கள் பணிகளைப் பகிர்ந்து சிறப்பிக்க வேண்டுகோளையும் வைத்தார்.


              பொருளாளர் வரவு செலவு அறிக்கை அளிக்கப் பட்டு மன்றத்தினரின் ஒப்புதல் பெறப்பட்டது.


              அ.பெ.கா.அமைப்பினர் கோரிய நாடகத்தில் நடிக்க மன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கோரப்பட்டது. நாடக வடிவமைப்பு, உரையாடல், பங்குபெறுவோர் எண்ணிக்கை உரியவர்களிடமிருந்து பெறப்பட்டதும் உறுப்பினர்களின் ஒப்புதலை உறுதிசெய்ய முடிவாற்றப் பட்டது.


             நிறைவாக மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.   


திங்கள், 22 ஜூலை, 2013
மணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது ஆண்டு முப்பெரும் விருதுகள் வழங்கும் விழாவில்  சில காட்சிகள்.

மணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளை 49 ஆவது ஆண்டு முப்பெரும் விழா.

                          மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது முப்பெரும் விழா திருவள்ளுவர் ஆண்டு 2044 கடகம் 4 காரிக்கிழமை    ( 20.07.2013 ) அன்று மாலை 6.00 மணிக்கு, புதுக்கோட்டை எஸ்.வி.எஸ். சீதையம்மாள் திருமண அரங்கில் நடைபெற்றது.  கவிஞர்கள் செ.சுவாதி, மு.கீதா ஆகியோர் விழாவிற்கு வந்தவர்களை இனிதே வரவேற்றனர்.
மன்றத்தின் உறுப்பினர்கள் ஆ.குமார், ச.கோகர்ணேசன் ஆகியோர் விருதாளர் வருகையினைப் பதிவு செய்தனர். 
                     
                    விழாவின் கலைநிகழ்வாக மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் அவர்களின் இருகுரல் இன்னிசை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாற்காலி என்னும் பேச்சில்லா குறு நாடகம் கவிஞர் நீலா தலைமையில் நடைபெற்றது. நாடகத்தில் கவிஞர் செ.சுவாதி, ஆ.குமார், கவிஞர் கண்ணதாசன், வள்ளியப்பன், மணிகண்டன், ஜெய்சங்கர் ஆகியோர் சிறப்பாக நடித்தனர்.

                  முப்பெரும் விழாவின் முதல் நிகழ்வாக “ சாதனையாளர்களுக்குப் பாராட்டு“ விழாவிற்கு மணிமன்றத் தலைவர் பொன.பாலசுப்பிரமணியன் தலைமை ஏற்றார். மாணவச் சாதனையாளர்கள் மேடைக்கு அழைத்து சிறப்பிடத்தில் அமர்த்தப் பட்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடிய   மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா  வரவேற்புரையினை ஆற்றினார். விழாவிற்கு தமிழிசைச் சங்கத் தலைவர் திரு சுப்பிரமணிய காடுவெட்டியார், ஆர்.ஏ.குமாரசாமி ஆகியோர்    முன்னி லை யேற்றனர்.

                   நிகழ்ச்சியினை கவிஞர் ரெ.சு.காசிநாதன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
ஆண்டறிக்கையினை புலவர் மு.பாலசுப்பிரமணியன் அளித்தார்.சிறப்பு விருந்தினர்களுக்கு மன்றச் செயற்குழுவினர் நூல்களை அன்பளித்துச் சிறப்புச் செய்தனர்.

                  தலைவர் உரையினைத் தொடர்ந்து... வாரணாசியில் நடைபெற்ற தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்  “வெப்ப மேம்பாட்டில் சாண எருவாட்டி“ என்னும் ஆய்வினை அளித்து இளம் விஞ்ஞானியாகச் சிறப்புப் பெற்ற தச்சன்குறிச்சி தூயமரியன்னைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஆ.அகஸ்டாவின்  சாதனைகளையும், வேளாண் தொழிலுக்கு புதிய கண்டுபிடிப்பான ” தானியங்கி நீரிறைக்கும் பொறி”    யினைக் கண்டுபிடித்த அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ச.மணிவண்ணன், இரா.சதீஸ்குமார், ஆறு.பாலாஜி ஆகியோரை மரகதவள்ளி அறக்கட்டளையின் அறங்காவலர் பொன்.க.மதிவாணன் அறிமுகம் செய்தார்.
பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புக் கருவியினை அப்பொறியியல் மாணவர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தது சிறப்பாக இருந்தது.  

                 சாதனையாளர் விருதுகளை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன்அவர்கள்   வழங்கினார் . சாதனையாளர்களைக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வாழ்த்தி உரையாற்றினார்.

                அவர் தனதுரையில் மன்றத்தின் தொடர்ந்த இப்பணியினைப் பாராட்டினார். வளரும் சாதனையாளர்களுக்கு முதுகில் செய்ய வேண்டிய ஒரே வேலை அவர்களைத் தட்டிக் கொடுப்பதுதான். சரியான களம் கிடைக்குமானால் நிறையச் சாதனையாளர்கள் உருவாவார்கள்..  போதிப்பதிலும் சாதிக்க வைப்பதே சமுதாய, நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னது சிறப்பாக இருந்தது.

                  அதனையடுத்து இந்தியக் குடியரசுத் தலைவரிடம் “செம்மொழி இளம் தமிழறிஞர் விருது” பெற்ற புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு.மாதவன் அவர்களை கவிஞர் ஆர்.நீலா அறிமுகம் செய்தார். அவருக்கான சாதனை விருதினை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மூத்த அறிவியல் அறிஞர்                                             திரு இரா.இராஜ்குமார் அவர்கள்  வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

                  இரண்டாவது நிகழ்வாக புதுக்கோட்டை மாவட்ட அளவில் 10,12 வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர் எண்மர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களை வாழ்த்தி மருத்துவர் ச.இராமதாசு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் முதல் மூன்று மாணவர்களுக்கான விருதுகளை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் வழங்கினார். த.மு.எ.க.ச . மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன்  முழுத்தேர்ச்சி பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களைப் பாராட்டியும், மாணவர் திறமையினை மதிப்பெண்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை அவர்களை மாண்புள்ள சமூகச் சிந்தனையாளர்களாக உருவாக்கும் வாழ்க்கைக் கல்வியே இன்றியமையாதது என்னும் கருத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.

                விழாவின் நிறைவுரையாக முதன்மைக் கல்வி அலுவலர் அரசுப் பள்ளி மாணவர், ஆசிரியர் சிறப்புத்  திறன்களையும்  கடந்த ஆண்டினைவிட இவ்வாண்டு புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ள நிலைமையினையும் அதிக முழுத்தேர்ச்சிப் பள்ளிகள் அதற்குச் சான்றாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். அவர் தனது கல்விப் பயணத்தின் பட்டறிவினை எடுத்துச் சொல்லி ஒவ்வொருவரின் உயர்வு அவரவர் முனைப்பு ஈடுபாட்டில்தான் இருக்கிறது. எல்லா மாணவரிடத்தும் திறன்கள் அடங்கிக்கிடக்கின்றன அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப் பட்டால் எல்லா நிலைகளிலும் உயர்வார்கள் ... இதில்  பள்ளி வேறுபாடுகள் இல்லை என்பதைப் பதிவு செய்தார்.

               அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகரளவு 17 பள்ளிகளைச் சேர்ந்த 22 முதல் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை தங்கள் பெற்றோருடன் மேடைக்கு வந்து மாணவர்கள் பெற்றது சிறப்பாக இருந்தது. விருதுகளோடு பாராட்டுச் சான்றிதழ், நூல்களும் விருதாளர்களுக்கு வழங்கப் பட்டது. அரங்க ஆளுமையினை நா.செந்தில்பாண்டியன்,சங்கர நாராயணன் கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் செம்மையாய்ச் செய்தனர்.

              மூன்றாவது நிகழ்வாக... புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் மேல்நிலையில் முழுத்தேர்ச்சி பெற்ற கீரமங்கலம், கொத்தமங்கலம், வெண்ணாவல்குடி, கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும்,  இடைநிலைத்தேர்வுகளில் முழுத்தேர்ச்சி பெற்ற குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம், கீழாநிலைக்கோட்டை, மரமடக்கி, பள்ளத்திவிடுதி, சுனையக்காடு, ஆயிங்குடி தெற்கு, தெம்மாவுர், எஸ்.குளவாய்ப்பட்டி, பொன்னன்விடுதி, மோலுடையான்பட்டி, கிருஷ்ணாஜிப் பட்டினம், மதியநல்லூர், வெள்ளாளவிடுதி, திருமணஞ்சேரி, சூரன்விடுதி, கே.ராசியமங்களம், மேலூர், திருவப்புர் ஆகிய 23 பள்ளிகளுக்கான   “முழுத்தேர்ச்சி விருது“களை முதன்மைக் கல்வி அலுவலர் வழங்க அவ்வப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பெற்றுமகிழ்ந்தனர்.

             முதல் மாணவர்களை மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தரும், முழுத்தேர்ச்சிப் பள்ளிகளை மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரனும் அறிமுகம் செய்தனர்.

           விழா பற்றிய பின்னூட்டக்கருத்தினை கொத்தமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வழங்கினார்.

            விருது பெற்றவர் சார்பாக முனைவர் சு.மாதவன் ஏற்புரை வழங்கினார்.
மன்றத் துணைத் தலைவர் நா.செந்தில்பாண்டியன் நன்றியுரையாற்றினார்.

            வருகைபுரிந்த அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. விருது பெற்றோர்க்கு பதிவின்போது அடையாள அட்டையும்  ரொட்டிப் பொட்டலமும் வழங்கப் பட்டது.
விழா இரவு 9.15க்கு நிறைவுற்றது. தொலைவிலிருந்து விருதுபெற வந்தவர்களுக்குப் பயணப்படி வழங்கப் பட்டது.

             அரங்கிலிருந்த அனைவருக்கும் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன் அவர்கள் சார்பாக சிற்றுண்டி வழங்கப்பட்டது. விருந்தோம்பல் பணியினை வெ.பரமசிவம், சு.இராசேந்திரன், கவிஞர்கள் செ.சுவாதி, கீதா, வள்ளியப்பன், சங்கரநாராயணன், இளந்தொண்டர்கள் சொ.இளங்கோ, கு.தமிழ்மணி  ஆகியோர்  கனிவுடன் ஆற்றினர்.

           விருதோடு விருந்தும் உண்டு மகிழ்வோடு திரும்பினர் அனைவரும்.

ஞாயிறு, 30 ஜூன், 2013

மணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா - சிறப்புக் கூட்டம்

               30.06.2013 அன்று முற்பகல் மணிமன்றத்தின் சிறப்புக் கூட்டம் மன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது. மன்றச் செயலாளர் திரு சிதம்பர ஈசுவரன் வரவேற்புரையாற்றினார்.
           
               49 ஆவது ஆண்டுவிழா தொடர்பாக கடந்த கூட்டத்தில் வடிவமைக்கப் பட்ட  தீர்மானங்கள் இறுதிவடிவம் பெற்றன. 

 விழாவில் முதல் மாணவர் விருது வழங்க மாவட்ட உயர் அலுவலர்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையும். மாணவச் சாதனையாளர்களைப் பாராட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ராஜ்குமார் அவர்களையும், வாழ்த்துரைக்க முத்துநிலவன், தங்கம்மூர்த்தி ஆகியோரையும் அழைக்க உறுதிசெய்யப் பட்டது.
              
               மன்ற உறுப்பினர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி கவிஞர் நீலா இன்னும் மூன்று நாள்களுக்குள் உறுதி செய்ய வில்லையெனில்  சிதம்பர ஈசுவரன் அவர்களின் இருகுரல் இன்னிசை நிகழ்ச்சி உறுதிப்படுத்த தீர்மானிக்கப் பட்டது.

            மன்ற உறுப்பினர் வீ.கே.கஸ்தூரிநாதன் ( எ ) வீ.கருப்பையன் 28.06.2013 அன்று மாமன்னர் கல்லூரியி்ல் நடைபெற்ற பொது வாய்மொழித் தேர்வி்ல் “ மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள்“ என்னும் ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டத்திற்கு பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்குப் பரிந்துரைக்கப் பட்டதைப் பாராட்டி அவருக்கு நினைவு நூல் பரிசளிக்கப் பட்டது.
      
           அண்மையி்ல் புதுக்கோட்டை விசயரெகுநாதபுரம் பள்ளி மாணவர்கள் 7 பேர் ஊர்தி விபத்தில் மரணமடைந்ததற்கு மன்றம் இரங்கலைத் தெரிவிக்கிறது.

           உத்தர்கண்டில் இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தோர்க்கும், அங்கு மீட்புப் பணியின் போது இன்னுயிர் நீத்த மதுரை விமானி பிரவீன் அவர்களுக்கும் மன்றம் தனது இரங்கலைத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

         நிறைவாக மன்றத் துணைச் செயலாளர் நா.செந்தில்பாண்டியன் நன்றிகூற கூட்டம் நிறைவுற்றது.

ஞாயிறு, 2 ஜூன், 2013

மணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா-திட்டமிடல் கூட்டம்

                 02.06.2013 மாலை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது ஆண்டு திட்டமிடல் கூட்டம் புதுக்கோட்டையில் மன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிர மணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.
                 கவிஞர் ஆர்.நீலா வரவேற்புரையாற்றினார்.
தலைவர் 49ஆவது ஆண்டுவிழா பற்றிய முன்னுரை வழங்கினார். மன்ற நிருவனர் புலவர் பொன்.கருப்பையா ஆண்டுவிழாத் திட்டங்களை முன்வைத்து விளக்கினார். கருத்துகள் மீதான விவாதங்களுக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.
          1 .மன்ற 49 ஆவது ஆண்டுவிழாவினை எதிர்வரும் 20.07.2013 அன்று வழக்கம்போல் எஸ்.வி.எஸ்.சீதையம்மாள் திருமண அரங்கில் நடத்துவது.
         2. ஆண்டுவிழாவில் 2013 மேல்நிலை, இடைநிலை அரசு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அரசு, அரசுநிதிஉதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவது.
         3.நகர எல்லைக்குட்பட்ட அரசு, அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை, இடைநிலை 2013 அரசு பொதுத்தேர்வுகளில்  பள்ளி வாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவது.
         4.புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், 2013 அரசு பொதுத்தேர்வுகளில் . மேல்நிலை,
இடைநிலைத் தேர்வுகளில்  முழுத்தேர்ச்சி பெற்ற அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குவது.
         5.சண்முகநாதன் பொறியியல் கல்லூரி புதிய கண்டுபிடிப்புக்கான மாணவர் சாதனையாளர் மூவர்க்கும், தச்சன்குறிச்சி இளம் விஞ்ஞானி மாணவர் ஒருவருக்கும் விருதுகள் வழங்குவது.
         6. செம்மொழி இளம் தமிழறிஞர் விருது  பெற்ற மாமன்னர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு. மாதவன் அவர்களைப் பாராட்டி விருது வழங்குவது.
         7.ஆண்டுவிழாவில் கவிஞர் ஆர் நீலா ஒருங்கிணைப்பில் மன்ற உறுப்பினர் எழுவர் பங்குபெறும் கல்வி விழிப்புணர்வு நாடகம் (30 நிமிடங்கள்) மற்றும் சிதம்பர ஈசுவரன் பங்கேற்கும் இருகுரல் இன்னிசை நிகழ்ச்சியை(15 நிமிடம்) நடத்துவது.
        8. ஆண்டுவிழாச் செலவினங்களுக்கு மரகதவள்ளி அறக்கட்டளையின் பங்களிப்பு நிதி( ரூ5000) உடன் மன்ற உறுப்பினர்கள் தலா ரூ 1000 வழங்குவது என முடிவாற்றப்பட்டது.
         9.விழாப் பணிக்குழு கடந்த ஆண்டு போலவே இவ்வாண்டும் செயல்படுவது.
       10.விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அரசு உயர் அலுவலர், சமூக ஆர்வலர் ஐவர் ஆகியோரை அழைப்பது.

ஊரக வளர்ச்சி வங்கி இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மன்ற உறுப்பினர்                                   திரு நா. மணிகண்டன் அவர்கள் பாராட்டப் பட்டார்.
நிறைவில் மன்றச் செயலாளர் திரு.சித.ஈசுவரன் நன்றி கூறினார்.

வியாழன், 9 மே, 2013

மன்ற மார்ச்சுத் திங்கள் கூட்டம்.

                மணிமன்றத்தின் திங்கள் கூட்டம் 30.03.2013 அன்று விடுதியில் மன்றத்தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது. 
மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். 
புதிய உறுப்பினராக கவிஞர் சுவாதி மன்றத்தில் இணைந்தார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

              1. ஈழத்தமிழர் இனப் படுகொலைத் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்புசபை கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டுமென்றும். அதற்காக தமிழகமெங்கும் நடக்கும் மாணவர் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவினை மன்றம் அளிப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது.
             2.“சிலம்பின் சிலிர்ப்பு “ காப்பிய நாடகத்தை வெளி அரங்கி்ல் நடத்த, இயக்குநர் நடிகர்கள் இசைவிற்கேற்ப முடிவு செய்வது எனத் தீர்மானிக்கப் பட்டது.
            3. மன்றத்தி்ன் 49 ஆவது  ஆண்டுவிழாவினை  சூலைத்திங்கள் மூன்றாம் வாரத்தில் நடத்துவது.
அவ்விழாவில் கடந்த ஆண்டினைப் போலவே புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, மற்றும் நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளி்ல்  பயின்று 2013ல் 10,12 அரசுப் பொதுத் தேர்வுகளி்ல் பள்ளி அளவி்ல் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், வருவாய் மாவட்ட அளவி்ல் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பது என்றும்  முடிவாற்றப் பட்டது.
           4.அவ்விழாவில் மாணவச் சாதனையாளர் மூவருக்கும், இளம் செம்மொழி அறிஞர் விருது பெற்ற முனைவர் சு.மாதவன் அவர்களுக்கும் விருது வழங்கிச் சிறப்பிக்க முடிவாற்றப் பட்டது.
           5.புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முழுத் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்க முடிவாற்றப் பட்டது.
          6.ஆண்டு விழாவி்ல் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இன்னிசை, வழக்காடுமன்றம் ( 60 நிமிட) கலை நிகழ்ச்சி நடத்த முடிவாற்றப் பட்டது.
         7. விழாச் செலவினங்களை மரகதவள்ளி அறக்கட்டளை மற்றும் மன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்வது என முடிவாற்றப் பட்டது.
 தீர்மானங்களை மன்ற நிருவாகி முன்மொழிய தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் விவாதிக்க தீர்மானங்கள் இறுதி வடிவம் பெற்றன..
நிறைவாக மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் நன்றியுரையாற்றினார்.

புதன், 20 பிப்ரவரி, 2013

சிலம்பின் சிலிர்ப்பு-நாடகம்

தி.பி.2044 சுறவம் 13 ஆம் நாள் காரிக்கிழமை (26.01.2013) , புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் , புதுக்கோட்டை மணிச்சுடர் கலைக்கூடம்  வழங்கிய, பாவலர் பொன்.க.இயக்கிய “ சிலம்பின் சிலிர்ப்பு“ நாடகத்தின் சில காட்சிகள்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

                புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் தொடக்க விழா, 26, 27-1.2 013 ஆகிய இரு நாள்கள் புதுக்கோட்டை எஸ்.வி.எஸ். சீதையம்மாள்  திருமண அரங்கி்ல் நடை பெற்றது. 
                     26.01.2013 மாலை  கருணாகரன் குழுவினரில்  மங்கள இசை நிகழ்வினைத் தொடர்ந்து  இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் துணைத் தலைவர் திரு சுப்பிரமணிய காடுவெட்டியார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.இளங்கோவடிகள் மன்றத் தலைவர் திரு. முரு. வைரமாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
                   அதனையடுத்து புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள் மன்றக் கொள்கை விளக்கமளித்தார்.  தொடக்க உரையினை திரு. சேகர் அவர்கள் ஆற்றினார். சிலப்பதிகாரப் பாடல் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றோர்க்கு புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகள் அவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
இரவு 8.00 மணிக்கு மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் அறமனச் செம்மல் சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையில்,
புதுகை மணிச்சுடர் கலைக் கூடம் வழங்கிய புலவர் பொன்.க. வின் “சிலம்பின் சிலிர்ப்பு“ என்னும் காப்பிய நாடகம் நடைபெற்றது.
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதை முதல் வழக்குரை காதை வரையிலான நிகழ்வுகள் மேடை நாடக வடிவில் அரங்கேறியது. முத்தமிழ்ப் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் மேடைக்கதை, உரையாடல். பாடல்களை ஆக்கி இயக்கி இருந்தார்.
                  அந்நாடகத்தி்ல் , கண்ணகியாக  புலவர்.இரா.நாகலெட்சுமி, கோவலனாக புலவர் மகா.சுந்தர், பாண்டியன் நெடுஞ்செழியனாக பொன்.க.மதிவாணன், கோப்பெருந்தேவியாக கவிஞர் செ.சுவாதி,  மாதரியாக கவிஞர் ஆர்.நீலா, பொற்கொல்லராக கவிஞர். வீ.கே.கஸ்தூரிநாதன், அமைச்சராக நா.செந்தில்பாண்டியன், ஊர்க்காப்புப் படைத் தளபதியாக சிதம்பர ஈசுவரன், ஒறுப்புப் படையாளனாக நா.மணிகண்டன், பொற்கொல்லரின் உதவியாளர் துருத்தி மற்றும் கோட்டைவாயில் காப்பாளராக இராச.செய்சங்கர், உதவியாளர் திருத்தி மற்றும் வாயில் காப்பாளராக சு.இராசேந்திரன், அந்தப்புர வாயில்காப்பாளராக கவிஞர் கண்ணதாசன், அரசவை வாயில் காப்பாளராக சொ.இளங்கோ, அரசவை நாட்டிய மங்கையாக செல்வி பா.ரூபபர்வதா. வழிப்போக்கர்களாக புலவர் மு.பா, செம்பை மணவாளன் ஆகியோர் பங்கேற்று நடித்திருந்தனர். உடைகள் மற்றும் ஒப்பனை செய. சண்முகராசாவும் இசையினை சு.இராசசேகர்,  மு.எழிலரசன் ஆகியோரும் செய்திருந்தனர். 
                       அரங்கப் பொறுப்பினை ஆ.குமார், செ.பாசுகர், வெ.பரமசிவம், மஸ்தான் பக்ருதீன் ஆகியோர் ஏற்றிருந்தனர், பின் குரல் கவிஞர் கீதா மற்றும் மு.பா. 
நாடகக் காட்சிகளை  செல்வா ஒளிப்பதிவு செய்தார்.. ஒளி, ஒலி அமைப்பினை புதுகை தனலெட்சுமி செய்திருந்தார். 
                    72 நிமிடங்கள் பார்வையாளர்களை மேடை நோக்கி ஈர்த்து வைத்த அளவில் நாடகம் சிறப்பாக இருந்தது. பங்கேற்றோர்க்கு முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகள் பாராட்டி. நினைவுக் கேடயங்களை வழங்கினார்.