புதன், 30 அக்டோபர், 2013

மணிமன்றம் - பொன்விழா ஆண்டு-செயல்திட்ட முன்வரைவு.


               29.10.2013 அன்று புதுக்கோட்டை நேசனல் அகாதமி அரங்கில் மணிமன்றம்- மரகதவள்ளி அறக்கட்டளையின் சிறப்புக் கூட்டம் மன்றத் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.

            மன்றத் துணைத்தலைவர் நா.செந்தில பாண்டியன் வரவேற்புரையாற்றினார்.
துணைச் செயலாளர் மகா.சுந்தர் வேலை அறிக்கை வழங்கினார்.

          கடந்த கூட்டத்திற்குப் பின்னர் மன்றத்தின் செயல்பாடுகள், மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்வுகள், பெற்ற சிறப்புகள் அறிக்கையில் அளிக்கப் பட்டது. உறுப்பினர்கள் கருத்துப் பகிர்விற்குப்பின்னர் அறிக்கை ஒப்புதலளிக்கப் பட்டது.

          மன்றப் பொருளார் சு.இராசேந்திரன் மன்றத்தின் நிதிநிலை அறிக்கையினை அளிக்க அவையினரால் ஒப்புதல் பெறப்பட்டது.

          மன்றத்தின் முதல் கூட்டப் பொருளாக, புதுக்கோட்டை திருக்குறள் கழகம் நவம்பர் 23ஆம் நாள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்த உள்ள அவ்வமைப்பின் 59 ஆவது ஆண்டுவிழாவில் மணிச்சுடர் கலைக் கூடத்தின் நாடகம் நடத்தக் கோரிய வேண்டுகோள் பற்றிய உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. ஒப்பனை, இசை, ஒலியமைப்புச் செலவினங்களை திருக்குறள் கழகம் முழுமையாக ஏற்றுக் கொண்டு உரிய காலம் ஒதுக்கித் தர இசைவு தந்தால் ” இவர்களும் இன்றும்” என்னும் இலக்கியச் சார்பு குறுநாடகத்தினை நடத்துவது என்றும் அந்நாடகத்தில் ஏற்கனவே பங்கேற்றவர்களுடன் ஒரு மகளிர் பாத்திரம் படைத்து அதில் மன்ற மகளிர் ஒருவர் பங்கேற்பது எனவும் முடிவாற்றப் பட்டது.

          அடுத்ததாக மணிமன்றத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா நிகழ்வினைச் சிறப்பாகக் கொண்டாடுவது பற்றி மன்ற உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப் பட்டது.
மன்ற உறுப்பினர்கள் அளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.

1. மணிமன்றத்தின் பொன்விழாவினை 2014 ஜுலை அல்லது ஆகச்டுத் திங்களில், இரண்டு அல்லது மூன்றுநாள் விழாவாக் கொண்டாடுவது.

2.  விழாவில் வழக்கமான முதல் மாணவர் விருது, முழுத்தேர்ச்சிப் பள்ளி விருது, அறிவியல் சாதனையாளர் விருதுகளோடு., சமுதாய மாற்றங்களுக்குச் சிறந்த பங்களிப்பாளர்களுக்குச் சமூகச் சாதனையாளர் விருதும் வழங்குவது.( அதிகமுறை குருதிக்கொடையளித்தோர், உடல், உடலுறுப்புக் கொடையாளர், விழிக்கொடையாளர்)

3.  விழாவில் இயல்,இசை, நாடக முக்கூறுகளை உள்ளடக்கிய, இளைஞர் இலக்கிய விழா, மக்களியக்க விழா, கலைவிழா என்னும் நிரலில் விழாவினை நடத்துவது.

4. மணிமன்ற ஐம்பதாவது ஆண்டுவிழாவில் “பொன்விழா மலர்“ வெளியிடுவது.
அம்மலரில் மன்றத்தின் உறுப்பினர்களின் படைப்புகள் ( சிறுகதை, கவிதை, நாடகம், நகைச்சுவை முதலியன), மணிமன்ற வரலாறு, கடந்துவந்த பாதை, ஆற்றிய சாதனைகள், மன்ற உறுப்பினர்களின் செயற்கரிய செயல்பதிவுகள்,படைப்பாளர்  மற்றும் நிகழ்வுச் சான்று ஒளிப்படங்களுடன் இடம்பெறச்செய்தல்.

    மலருக்கு  வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் பெறுதல். 

5. பொன்விழாவில் புகழ்மிக்க முத்தமிழ் வித்தகர்களைச் சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பது.

6. நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சி, வானொலி ஊடகவியலாரை அழைத்தல்.

இவை தவிர தொடர் நிகழ்வுகளாக...

7.  2014 சனவரித்திங்கள் முதல் புதுக்கோட்டை கல்வி நிறுவனங்களில் மன்றத்தின் சார்பாக தமிழகக் கலை மற்றுதட  பண்பாட்டினை வளர்க்கும் விழி்ப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி மாணவர்களைப் பங்கேற்கச் செய்தல். படைப்பாற்றல் வளர்த்தல்.

 ( கிராமியக் கலைகள், நாடகப் பயிற்சிப் பட்டறை, தாய்மொழி மேம்பாட்டுத் திறன் வெளிப்பாடுப் போட்டிகள் முதலான )

8.  ஊரக அண்மைக் கிராமங்களில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்.

 (சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வருமுன் காப்போம், நமதுநலம் நமது கையில், நீர்ச் சிக்கனமும் சேமிப்பும், மதுவின் கேடுகள் - பற்றிய கலைநிகழ்ச்சிகள் . இசை,தெருமுனை நாடகம், துண்டறிக்கைகள், காணொலிக் காட்சிகள் மூலம் )

9. 2014 சனவரி முதல் 2014 சூன் திங்களுக்குள் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில், கல்வி நிறுவனங்களில 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல்.

மேற்கண்ட முடிவுகளைத் தொடர்ந்து, பொன்விழா மலர்க்குழு அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்பாளராகக் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களை இப்பொதுக்குழு முன் நிறுத்துகிறது. அடுத்த கூட்டத்தில் குழுக்கள் இறுதி செய்யப்படும்.

நிறைவாக உறுப்பினர் கோ.வள்ளியப்பன் அவர்கள் நன்றி கூறக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

மன்ற உறுப்பினர்கள் தங்கள் படைப்புகளை, தங்களது ஒளிப்படம் மற்றும் அறிமுகக் குறிப்புகளுடன்  நா.முத்துநிலவன் , 96, சீனிவாச நகர், 3ஆம் வீதி, மச்சுவாடி, புதுக்கோட்டை என்ற முகவரிக்கோ, muthunilavanpdk@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பிடக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும் தொடர்பிற்கு பாவலர் பொன்.க.9442211096, நா.முத்துநிலவன்  9443193293 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக