ஞாயிறு, 6 நவம்பர், 2011

கூடங்குளம் அணுஉலை-ஒரு பார்வை.

                மணிமன்றத்தின் நவம்பர்த் திங்கள் கூட்டம் தி.பி.2042 துலைத் திங்கள் 20 ஆம் நாள், வழக்கமான கூட்ட அரங்கில் நடை பெற்றது. மன்றத் தலைவர். திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையேற்றார். துணைச் செயலாளர் திரு நா. செந்தில் பாண்டியன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். 
 கூடங்குளம் அணுமின் உலை பற்றிய கருத்துகளை மன்ற உறுப்பினர்கள் பதிவு செய்தனர். அணுமின் கழகத்தின் நிலைப்பாடு மற்றும் அணுமின் உலை அகற்றக் கோரும்  போராட்டக் குழுவின் கோரிக்கைகள் பற்றிய கலந்தாய்வு நடந்தது.  
                   அறிவியல் மக்களுக்காகவே, அணுவின் சக்தி ஆக்கத்திற்காகவே என்னும் அடிப்படையில் அணுமின் சக்தியின் அவசியம் இன்றியமையாதது என்றாலும்,  மக்களுக்காகவே திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் நலன் பறிபோவது என்பது சனநாயக நாட்டில் பொருத்தமில்லாததாக உணரப் படுகிறது. வேண்டாம் என்று போராட்டக்குழு வைக்கும் வாதங்கள் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப் படும் என்பது. அணு ஈணுலைக் கழிவான புளுடோனியம்  மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுமா? இல்லை அணு ஆயுதங்கள் செய்யப் பயன் படுத்தப்படுமா? உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு குறைந்த மின்பயனும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும்பயனும் கிடைப்பதற்காக,  மிலியன் ஆண்டுகளானாலும் அழியாத கழிவுகள் கடலடியிலோ. நிலத்தடியிலோ புதைக்கப் பட்டால் , நீர் நில வளங்கள் கெட்டுவீடும் அபாயம் உள்ளது.  பராமரிப்புக் குறைவு மற்றும் இயற்கைச் சீற்றப் பாதிப்புகளால் அணுக்கதிரியக்கக் கசிவு ஏற்படின் நான்கு மாவட்ட மக்களின் இன்றைய மற்றும்  எதிர்காலத் தலைமுறை இனம்தெரியா பல்வேறு உள, மன. நோய்களின் பாதிப்புகளை ஏற்க வேண்டுமா? அணுமின் உற்பத்திக்கான அடிப்படையான யுரேனியம் தாதுவிற்கு அந்நிய நாட்டை நம்பியிருக்க வேண்டிய நிலையில் , எதிர்கால வெளியுறவுக் கொள்கை முரண்பாடுகளால் யுரேனியம் தாது கிடைக்காது போயின்  அணுஉலையின் செயல்பாடு என்னவாகும்?  போன்ற போராட்டக்குழுவின் வாதங்களும் கருத்தில் கொள்ளப் பட வேண்டும். எனவே மக்களின் வாழ்வாதாரப்  பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை அணுமின் கழகக் குழு உணரச் செய்த பின்னர் அணுமின் உற்பத்திப் பணியினைத் தொடங்குவது  சாலச் சிறந்ததாகும் என்கின்ற  கருத்தினை இச்சமூக நற்பணிமன்றம் வரவேற்கிறது.
          நிருவுனர் பாவலர் பொன்.க  அவர்கள் உறுப்பினர் கருத்துத் தொகுப்புகளைப் பதிவு செய்தார். நிறைவில் துணைச் செயலாளர் திரு  மகா.சுந்தர் அவர்கள் நன்றி கூறினார்.

திங்கள், 26 செப்டம்பர், 2011

செம்மல்கள் பிறந்த செப்தெம்பர் திங்களில்..

          திருவள்ளுவர் ஆண்டு 2042 கன்னித் திங்கள் 9ஆம் நாள் திங்கள் கிழமை மணிமன்றத்தின் திங்கள் கூட்டம், மன்றத் தலைவர் திரு பொன்.பால சுப்பிர மணியன் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. செப்தெம்பர்ச் செம்மல்களின் சிறப்புகள் போற்றப்பட்டன. செப்-5ல் பிறந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், நாடகத்தந்தை சங்கரதாசு அடிகள், மேனாள் குடியரசுத் தலைவர்  முனைவர் இராதாகிருட்டினன்,தமிழறிஞர் சாலை இளதிரையன் (செப் -6 )முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்( செப்-10) பேரறிஞர் சி.ந.அண்ணாத்துரை (செப்-15) அரசன் சண்முகனார், பகுத்தறிவுப் பகலவன் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்  ஈ.வே.ரா (செப்-17) ,உடுமலை நாராயணகவி ( செப்-25 ) பாவலர் பெரியசாமி தூரன், சி.பா.ஆதித்தனார்   (செப்-27 )  மாவீரன் பகத்சிங் ( செப்- 28 ) திருக்குறள் முனுசாமி ( செப்-29 ) ஆகியோரது பிறந்தநாள்களும், இத்திங்களின் மறைந்த பேரா.இலக்குவனார் (செப்-3) அன்னை தெரசா ( செப்-5) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ( செப்-11 ) தமிழ்க்கடல் மறைமலையடிகள் ( செப்-15 )  தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரம் ( செப்-17) இரட்டைமலை சீனிவாசன் (செப்-18) புலவர் குழந்தை ( செப்-24) தமிழவேள் பி.டி.இராசன் ( செப்-25 ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ( செப்-26 ) ஆகியோரின் நினைவுகளும் போற்றப்பட்டன. 
              ஊழல்களுக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்துகளை துண்டறிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் பரப்பிட வேண்டிய இன்றியமையாமை பற்றியும் முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன. மன்றத்தின் துணைச் செயலாளர் திருமதி .அரங்க.நீலா அவர்களின் ” கற்றது சிறையளவு” ” சக்கரவாகப் பறவைகள்”"Education within Iron bars" ஆகிய மூன்று நூல்கள்  25.09.2011 அன்று ஆலங்குடியில் அறிவொளி நாயகி திருமதி ஷீலாராணி சுங்கத் அவர்களால் வெளியிடப் பட்டதற்கும், மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தர் அவர்கள் செப் -5ல் புதுக்கோட்டை கவிராசன் இலக்கியப் பேரவையால் நல்லாசிரியர் விருது பெற்றமையையும் மன்றம் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தது.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

ஐம்பெரும் விழா-2011

புதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டு ஐம்பெரும் விழா திருவள்ளுவர் ஆண்டு 2042 கடகம் திங்கள் 7ஆம் நாள்(23.7.11) காரிக்கிழமை,மாலை 5.30 மணிக்கு, புதுக்கோட்டை சாந்தநாதபுரம் எஸ்.வி.எஸ் சீதையம்மாள் திருமண அரங்கில் , மன்றத்தின் தலைவர் திரு.பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்தினை பாவலர் பொன்.க.அவர்கள் பாடினார். வரவேற்புரை யினை மன்ற நிறுவனர் புலவர் பொன்.கருப்பையா வழங்கினார். ஆண்டறிக்கை மன்றத்தின் செயலாளர் திரு.சிதம்பர ஈசுவரனால் அளிக்கப்பட்டது.விழா நிகழ்ச்சிகளை மன்றத்தின் துணைத் தலைவர் புலவர் மு.பா அவர்கள் அழகுறத் தொகுத்து வழங்கினார்.
         விழாவின்  முதல் நிகழ்வாக ஆடல் கலையினை, செல்வி பா.ரூபபர்வதா அவர்கள் நிகழ்ததினார். அதனைத் தொடர்ந்து  23.1.2011ல் திலகவதியார் திருவருள் ஆதீனத்தில் செம்மொழி கருத்தரங்க மேடையில் அரங்கேற்றப் பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்ட ”பழிதவிர்த்த பாவலர் ” எனும் சங்க இலக்கிய நாடகக் காணொளி திரையிடப்பட்டது. விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.          
        இரண்டாம் விழாவாக, புலவர் பொன்.க எழுதிய ”திருப்புக தேரை” என்னும் சங்க இலக்கியக் குறுநாடக நூலினை மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தமிழ்த்திரு எம்.எஸ்.முத்துச்சாமி அவர்கள் வெளியிட்டார்.முதல் நூலினை புதுக்கோட்டை மாவட்ட வணிகர் கழகத் தலைவர் அறமனச்செம்மல் சீனு.சின்னப்பா அவர்கள் பெற்றுக் கொண்டார். நூலினை சாகித்திய அகாதமி தமிழ்ப்பிரிவு ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் அறிமுகம் செய்து நூலின் அமைப்பு, நூல் நுதலும் பொருள், நூலின் நோக்கம் பற்றி அழகுற எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்து நிலவன் அவர்கள், நூலில் இடம் பெற்றுள்ள ஐந்து குறுநாடகங்கள் பற்றியும்,  மொழிநடை, பாத்திரப் படைப்பு, நூல் ஏற்படுத்த உள்ள தாக்கம்  பற்றியத் திறனாய்வினை பாங்குடன் விளக்கினார். நூலினை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் அழகிய தமிழில், நூல் நயத்தினை விளக்கி, நூல் எதிர்கால இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதலாக அமைந்துள்ளமையையும். தவறுகளும் அநீதி இழைப்பவர் எவராக இருந்தாலும் அவற்றுக்கு  எதிராகப் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாகப் பெண்கள், குரல் கொடுக்க வேண்டும என இக்கால சமூக விழிப்புணர்வுச் சிந்தனைகளை வெளிப்படுத்தியது சிறப்பாக அமைந்திருந்தது..
         மூன்றாவதாக , சாதனை படைத்த மாணவ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. சூரிய சக்தியால் இயங்கும் நீர் இறைக்கும் பொறியினைக் கண்டு பிடித்த, திருவண்ணாமலை திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி மாணவர் சே.இராஜேஸ் , சாண எரிவாயுவின் உற்பத்திக்கு உறுதுணை செய்யும் வேப்பிலையின் வீரியம் பற்றிய ஆய்வினை 96 ஆவது அகில இந்திய அறிவியல் மாநாட்டில் படைத்துச் சாதனை படைத்த, புதுக்கோட்டை கந்தர்வகோட்டை வட்டம் ,அரியாணிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் இல..பிரபு , மண்ணரிப்பைத் தடுக்க காடுகள் வளர்ப்பின் அவசியம் பற்றிய ஆய்வினை 98 ஆவது அகில இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் படைத்து இளம் விஞ்ஞானியாகப போற்றப்பட்ட ஆவுடையார் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி செல்வி க.மகாலெட்சுமி ஆகியோருக்கு மாணவச் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக உயிரி தொழில் நுட்பத் துறைத் தலைவர் முனைவர் வெ.சுகுமாறன், இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார். அருகி வரும் எரிபொருள் தேவைகளுக்கான மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பையும் , இயற்கைப் பாதுகாப்பின் அவசியம் பற்றியும் கருத்துரை வழங்கி, அத்தகு சாதனைபடைக்க ,அவர்களை வழி நடத்திய தமிழ்நாடு அறிவியல் இயக்க வழிகாட்டி ஆசிரியர்கள் மணிகண்டன், சுரேஸ்ராசன் ஆகியோரை வெகுவாகப் பாராட்டினார். இளம் விஞ்ஞானிகளை மன்றத்தின் துணைச் செயலாளர் புலவர் மகா சுந்தர், மன்ற உறுபப்பினர்கள் கவிஞர் வீ,கே. கஸ்தூரிநாதன், இராச.ஜெய்சங்கர் ஆகியோர் அழகாக அறிமுகம் செய்தனர்.
          நான்காவது விழாவாக, 2010.11 கல்வியாண்டில் மேல்நிலை, இடைநிலை அரசுப் பொதுத் தேர்வுகளில்புதுக்கோட்டை  மாவட்டஅளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் புதுக்கோட்டை நகர் எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி முதல் மாணவர்களுக்கும் ”முதல் மாணவர்” விருதுகளை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் தமிழ்த்திரு ரெ.பரமசிவம் அவர்கள் வழங்கினார். அவர் தனது உரையில், இத்தகு சேவையினைச் செய்யும்  மன்றத்தின் செயல்பாட்டினை வெகுவாகப் பாராட்டியதோடு,  மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள இது போன்ற பாராட்டு விருதுகள்  உத்வேகம் அளிக்கும் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து விருது பெற்ற மாணவர்களை சுபபாரதி கல்வி நிறுவனத் தலைவர் தமிழ்த்திரு ஜி.தனசேகரன், வெங்கடேசுவரா கல்வி நிறுவனத் தலைவர் மொழிவளக் கவிஞர் இராம.வ.கதிரேசன், தொலைதொடர்புத்துறை கோட்டப் பொறியாளரும் கவிஞர் மன்றத் தலைவருமான தமிழ்த்திரு நிலவை வ.பழனியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
          ஐந்தாவது விழாவாக ,2010-11 கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் ,புதுக்கோட்டை மாவட்டத்தில் முழுத் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா, புதுக்கோட்டை உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்த்திரு சண்முக பழனியப்பன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மறமடக்கி, தாஞ்சூர், கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆயிங்குடி(தெ) கீழையுர், இராசேந்திரபுரம், கிருஷ்ணாஜிபட்டினம், கிளாங்காடு, குருங்களுர், தாழனூர், போசம்பட்டி ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், விருதுகளைப் பெற்றனர்  விழா சிறப்புற அமைய, எஸ்.வி.எஸ்.விஜயா டயர்ஸ் எஸ்.வி.எஸ் செந்தில் ஆண்டவர், எஸ்.வி.எஸ்.ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் எஸ.வி.எஸ்.வி.ஜெயக்குமார், குறள் நெறிப்பயிலக நிறுவுனர் திருமதி சந்திரா ரவீந்திரன், வெங்கடேசுவரா கல்வி நிறுவன அறங்காவலர் திரு ஆர்.ஏ. குமாரசாமி, ஏர்செல் ஜெய் பார்த்திபன், பாரத் வணிக வளாக உரிமையாளர் திரு சுந்தரமூர்த்தி, கோடீசுவரா அழகப்பன் ஆகியோர் பேருதவி புரிந்தனர். நிறைவாக மரகதவள்ளி அறக்கட்டளையின் அறங்காவலர் திரு.மதிவாணன் அனைவருக்கும் நன்றி கூறினார். விழா பற்றிய விளம்பரங்களை புதுக்கோட்டை வயி.ச.நகைமாளிகை திரு வெங்கடாசலம் அவர்களும் சி.டி.என், எஸ்.ஆர், எம்.டி.வி.உள்ளுர் தொலைக் காட்சி நிறுவனங்களும், நாளேடுகளும் பரப்புரை செய்திருந்தது நன்றிக்குரியதாக இருந்தது. விழாவில் கலந்து கொண்ட மாணவர் பெற்றோர்,  பார்வையாளர் அனைவருக்கும்  பழனியப்பா உணவக உரிமையாளர் தமிழ்ததிரு சண்முக பழனியபன் அவர்களும், பேக்கரி மகராஜ் உரிமையாளர் தமிழ்த்திரு சீனு.சின்னப்பா அவர்களும் இனிப்பு மற்றும் இரவுச் சிற்றுண்டி வழங்கியுதவினர். விழாவிற்குப் புதுக்கோட்டைத் திருக்குறள் கழகத் தலைவர் திரு ப.இராமையா, இலக்கியப் பேரவை திரு.மு.முத்து சீனிவாசன், கவிராசன் இலக்கியப் பேரவை க.முருகபாரதி, உலகத்திருக்குறள் பேரவை இரா.நாகலெட்சுமி, சத்யா நகைமாளிகை மு.இராமுக்கண்ணு, புலவர் மா.நாகூர், ந.புண்ணியமூர்த்தி, கலை இலக்கிய அமைப்பைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் செம்பை மணவாளன், முனைவர்.சு.மாதவன். ஆனந்தஜோதி திங்களிதழ் ஆசிரியர் மீரா.சுந்தர் . புலவர் துரை.மதிவாணன், ஜே.ஆர்.சி. பரமசிவம், பசுமைப்படை மீனாட்சி சுந்தரம், ஊர்க்காவல்படை நண்பர்கள். நண்பா அற்க்கட்டளையினர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ஆ.செல்லத்துரை, பொருளாளர். முனியாண்டி நல்லாசிரியர் மா.சத்தியமூர்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், நிருவாகிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்  செய்தியாளர்கள் என் நூற்றுக் கணக்கானோர் விழா நிறைவு வரை இருந்து சிறப்பித்ததும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும்  மூன்று மணிநேரம் நடந்த ஐம்பெரும் விழா முழுமைக்கும் இருந்து சிறப்பித்ததும் மன்ற வரலாற்றில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தேனீக்ளின் சுறுசுறுப்போடு செய்த மன்றத்தின் பொறுப் பாளர்கள் திருவாளர்கள் சு.இராசேந்திரன், அ.நீலா, இரா.செல்லையா, ஆ.செல்வராசு, ,ஆ.குமார், ச.கோகர்ணேசன், வெ.பரமசிவம், .இராச.ஜெய்சங்கர், மா.கண்ணதாசன்,  ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.இரவு.8.59 மணிக்கு நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. .

திங்கள், 18 ஜூலை, 2011

2011 ஐம்பெரும் விழா அழைப்பிதழ்.

புதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டுவிழா ,ஐம்பெரும் விழாவாக, வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு  2042 கடகம் 7 ஆம் நாள் ( 23.07.2011) காரி(சனி)க்கிழமை, புதுக்கோட்டை சாந்தநாதபுரம், எஸ்.வி.எஸ் சீதையம்மாள் திருமண அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. மன்றத்தின் தலைவர் திரு பொன்.பால சுப்பிரமணியன் விழாவிற்குத் தலைமை தாங்குகிறார்.
                  விழாவின் முதல் நிகழ்வாக கலைவிழா நடைபெறஉள்ளது. செல்வி பா.ரூபபர்வதா ஆடல்கலை நிகழ்த்துகிறார். அதனைத் தொடர்ந்து மணிச்சுடர் கலைக்கூடம் வழங்கும் ” பழிதவிர்த்த பாவலர் ” என்னும் சங்க இலக்கிய நாடகக் காணொளிப் படக்காட்சி திரையிடப்படுகிறது.
        நிறுவுனர் புலவர் பொன்.கருப்பையா வரவேற்புரை வழங்க உள்ளார். செயலாளர் சிதம்பர ஈசுவரன்  ஆண்டு அறிக்கை வழங்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து,குழந்தைகள் நல மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் முன்னிலையில்  புலவர் பொன்.கருப்பையா அவர்களின் ” திருப்புக தேரை” என்னும் சங்க இலக்கியக் குறுநாடக நூலினை புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் தமிழ்த்திரு எம்.எஸ்.முத்துச்சாமி அவர்கள் வெளியிட உள்ளார். முதல் நூலினை  புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் தமிழ்த்திரு சீனு.சின்னப்பா அவர்கள் பெற்றுக் கொள்கிறார். அந்நூலினை சாகித்திய அகாதமி ஆலோசனைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் அறிமுகம் செய்யவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் திறனாய்வு செய்யவும் உள்ளனர்.
           மூன்றாவது விழாவாக, சாதனை படைத்த இளம் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு செய்யப்படுகிறது. திருவண்ணாமலை திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி மாணவர் சே.இராஜேஸ், புதுக்கோட்டை அரியாணிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் இல.பிரபு, ஆவுடையார் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி க.மகாலெட்சுமி ஆகிய மாணவச் சாதனையாளர்கள், அவர்களின் அறிவியல் ஆய்வுகளுக்காகப் பாராட்டப்பட உள்ளனர்..இவர்களை தஞ்சாவுர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக உயிர் தொழில் நுட்பத்துறைத் தலைவர் முனைவர் வெ.சுகுமாறன் அவர்கள்  பாராட்டி விருது வழங்க உள்ளார்.
          நான்காம் விழாவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2010-11 கல்வி யாண்டில் இடைநிலை, மேல்நிலை அரசுப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும்  புதுக்கோட்டை நகர அளவில் உள்ள அனைத்து அரசு, மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளிலும் பயின்று பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் ” முதல் மாணவர் விருது” விருதுகளை, புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் தமிழ்த்திரு ரெ.பரமசிவம் அவர்கள் வழங்கிப் பாராட்டுரை செய்கிறார். முதல் மாணவர்களுக்கு,  கைக்குறிச்சி சுபபாரதி கல்விநிறுவனங்களின் தலைவர் தமிழ்த்திரு ஜி.தனசேகரன், வெங்கடேசுவரா கல்வி நிறுவனத் தலைவர் தமிழ்த்திரு இராம.வ.கதிரேசன் , தொலைதொடர்புத் துறைக் கோட்டப் பொறியாளர் தமிழ்த்திரு கவிஞர் நிலவை.ந.பழனியப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
        ஐந்தாம்  விழாவாக, கடந்த கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைநிலை, மேல்நிலைத் தேர்வுகளில் முழுத்தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு, புதுக்கோட்டை உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் தமிழ்த்திரு சண்முக பழனியப்பன் அவர்கள் முன்னிலையில்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழ்த்திரு ரெ.பரமசிவம் அவர்கள் விருதுகள் வழங்கிச் சிறப்பி்க்கிறார்.
                   கீழ்க்கண்ட பள்ளிகள் அவ்விருதினைப் பெறகின்றன.
1.அரசு மேல்நிலைப்பள்ளி-மறமடக்கி, 2.அரசு மேல்நிலைப் பள்ளி-தாஞ்சூர்,3.அரசுமேல்நிலைப்பள்ளி-கல்லூர்.4.அரசு உயர்நிலைப் பள்ளி- ஆயிங்குடி,5.அரசு உயர்நிலைப் பள்ளி-கீழையுர்,6.அரசு உயர்நிலைப்பள்ளி-இராசேந்திரபுரம்,7.அரசு உயர்நிலைப்பள்ளி-கிருஷ்ணாஜி பட்டினம்,8.அரசு உயர்நிலைப்பள்ளி- கிளாங்காடு, 9.அரசு உயர்நிலைப்பள்ளி-குருங்களுர்,10.அரசு உயர்நிலைப்பள்ளி,தாழனூர்,11.அரசு உயர்நிலைப் பள்ளி- போசம்பட்டி.
          மேற்கண்ட விழா நிகழ்வுகளை புலவர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் தொகுத்து வழங்க இருக்கிறார். விழா நிறைவில் மரகதவள்ளி அறக்கட்டளையின் அறங்காவலர் க.மதிவாணன் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்.
         புதுக்கோட்டையின் புகழ்மிக்க அறமனச் செம்மல்களின் பேராதரவோடு சிறப்பாக நடைபெற உள்ள இவ்விழாவிற்குத் தங்களின் வருகையையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்.

செவ்வாய், 31 மே, 2011

ிபான் விழா ஆண்டை நோக்கி.....

தோற்றம்
             1964 ஆம் ஆண்டில் சமூக அக்கறையுள்ள இளைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மணிமன்றம் கடந்த 46 ஆண்டுகளாக பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளை ஆற்றி வந்துள்ளது.
நோக்கம்
            அரசியல், மத,இன,சாதி சார்பற்ற நிலையில்  பின்தங்கிய கிராமப்புற மாணவர், சமுதாய முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது..

 அமைப்பு முறை
            நிறுவுனரும் நிருவாகியும்  புலவர் பொன்.கருப்பையா.   
உறுப்பினர்்
            சமூக அக்கறையுள்ள வர்கள். வயது வரம்பு இல்லை.
பொறுப்பாளர்கள் ்
            ஆண்டு தோறும் தேர்தல் முறையில் ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு துணைச் செயலாளர்கள், ஐந்து உறுப்பினர்களுக்கு ஒரு செயற்குழு உறுப்பினர். ஒரு தணிக்கையாளர்.
            தொடக்கத்தில் 12 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இம்மன்றத்தில்  இதுவரை 312 பேர் அங்கம் வகித்துள்ளனர். பல்வேறு துறைகளில் பணியாற்றுபவரகள் தங்கள் பணிமாறுதல், ஒழுங்கு நடவடிக்கை, இறப்பு காரணமாக நீங்கியவர்கள் போக 2011ல் 22 உறுப்பினர்களோடு இயங்கி வருகின்றது.

செயல் முறை 
             திங்கள் தோறும் மன்ற உறுப்பினர்கள் கூடி அவ்வக்கால சமூகப் பிரச்சனைகள் பற்றி பேச்சு, கவிதை, பாட்டு, விவாதம், பட்டிமன்றம் மூலம் விவாதித்து, தீர்வுக்கான வழிமுறைகளில் செயலாற்றுவது.
   ஒவ்வொரு ஆண்டும் மே-சூலைத் திங்கள்களில் மன்ற ஆண்டுவிழாவினை  பொது அரங்கில் பொதுமக்கள் முன்னிலையில் நடத்துவது. ஆண்டுவிழாவில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மருத்துவர்கள்.சிறந்த கல்வியாளர்கள்.சமூகசேவையாளர்களை அழைத்துச் சிறப்பிப்பது. ஆண்டுவிழாவில் மன்ற உறுப்பினர்களின் நாடகம், இன்னிசை, பட்டிமன்றம், மாணவர் கலைநிகழ்ச்சிகள் நடத்துவது.
நிதி  
         திங்கள் கூட்டச் செலவினங்களுக்கு மன்ற உறுப்பினர்களின் ஆண்டுச் சந்தா(உரூ 50) வினையும், ஆண்டுவிழாச் செலவினங்களுக்கு தன்னார்வ நல்லுள்ளங்கள் அளிக்கும் நன்கொடையினையும் பயன் படுத்திக் கொள்வது.

ஆண்டு தோறும் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு பொதுக்குழுவால் ஒப்புதல் பெறப்படும்.
கல்விப்பணி 
புதுக்கோட்டை நகர புறநகரப் பகுதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே க்ற்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் அப்பள்ளிகளில் ஆண்டுத்தேர்வில் வகுப்புவாரியாக முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை ,கல்வித்துறை பரிந்துரையோடு ஆண்டுவிழா மேடையேற்றி, பொதுமக்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கிப் பாராட்டத் தொடங்கினோம்.அப்பணிக்கு மாணவர்களிடேயும் பொதுமக்களிடையேயும் இருந்த வரவேற்பு, பரிசு வழங்கும் திட்டத்தினை புதுக்கோட்டை நகராட்சிப் பள்ளிகள் அனைத்திற்கும் 1972முதல் விரிவு படுத்தினோம்.
 அதனைத் தொடர்ந்து 1975 முதல் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டது.

1978முதல் புதுக்கோட்டை அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் தனியார் ஓரியண்டல் பள்ளி மாணவர்களுக்கும் இத்திட்டத்தினை விரிவு படுத்தியோடு,  பத்தாம் வகுப்பு, மேல்நிலை அரசுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு விருது வழங்கி, பாராட்டுச் சான்றுகள் வழங்கிப் பெருமைப் படுத்தியுள்ளோம்.
2002 முதல் நிறுவுனர் புலவர் பொன்.கருப்பையா அவர்களின் துணைவியார் நினைவாக மரகதவள்ளி அறக்கட்டளையும் மணிமன்றத்தோடு இணைந்து இவ்விருது வழங்கும் விழாவினைச் சிறப்பாக நடத்தி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் இம்மன்ற முதல் மாணவர் விருதுகளைப் பெற்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக.வழக்குரைஞர்களாக, பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத் தக்கது.

 46 ஆண்டுவிழாக்களை வெற்றிகரமாகக் கடந்த இவ்வமைப்பின் 47 ஆவது ஆண்டுவிழா வருகின்ற 2011சூலை இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளது.  தொடரும் சமூகப்பணிகள்.......








வியாழன், 26 மே, 2011

kodai ariviyal thiruvizha-A.V.Kovil

21 .05 .2011 அன்று ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய கிளையின் சார்பாக கோடை அறிவியல் திருவிழா நடைபெற்றது .ஆவுடையார்கோவில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சுப்பையா அவர்கள் விழாவினை தொடங்கி வைத்தார் .100 மாணவர்கள் கலந்து கொண்டனர் .ஒன்றிய பொறுப்பாளர்கள் திரு சுரேஷ்ராஜன் ,செல்வராசன் ,அய்யனார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் .தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்துணைத்தலைவர் திரு பொன்.கருப்பையா எளிய அறிவியல் ஆய்வுகள் ,அறிவியல் அற்புதங்களை விளக்குதல் ஆகியவற்றில் பயிற்சி அளித்தார் .கோகர்நேசன் காகித மடிப்பு ,விளையாட்டுகள் ஆகியவற்றில் பயிற்சியளித்தார் .மாநில செயற்குழு உறுப்பினர் திரு கோவிந்தசாமி ,மாவட்ட செயலாளர் திரு சேதுராமன் ,துணை செயலாளர் திரு  ஜெயபாலன் ஆகியோர் குளம் ,மரம் பற்றிய ஆய்வுகளில் மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

புதன், 25 மே, 2011

kodai ariviyal thiruvizha

புதுக்கோட்டை யில்  தமிழ் நாடு  அறிவியல் இயக்கத்தின் சார்பாக கோடை அறிவியல் திருவிழா கடந்த மே  17 .18 .19 ஆகிய  நாள்களில்  சிறப்பாக நடை பெற்றது.6 முதல் 9   வகுப்பு பயிலும்  .56 மாணவர்கள் அத்திருவிழாவில் பங்கேற்றனர் . திருவிழாவினை தணிக்கையாளர் தியாகராஜன் அவர்கள் தொடக்கி வைத்தார் .அறிவியல் இயக்க செயல்பாடுகள் பற்றியும் திருவிழாவின் நிகழ்வுக்கூறுகள் பற்றியும் த.அ.இயக்க மாநில  பொது  செயலாளர்  பாலகிருஷ்ணன் விளக்கினார் .அதனைத்தொடர்ந்து காகித மடிப்புக்கலை பற்றி சதாசிவம் அவர்களும், சீன காகித வடிவக்களை பற்றி மதிவாணன் அவர்களும் , எளிய அறிவியல் ஆய்வுகள் புவியரசு அவர்களும் , அறிவியல் அற்புதங்களை விளக்குதல் பற்றி பாவலர்பொன். கருப்பையா    அவர்களும், மாணவர்களுக்கு விளக்கினர் .அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பாடல்களும் விளையாட்டுகளும் உற்சாகமூட்டின. கதை சொல்லும் கலை பற்றி கவிஞர் முத்துநிலவன் அவர்கள் பயிற்சியளித்தார் .புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துள் குள ஆய்வு பற்றி மணவாளன் குமரேசன் ஆகியோரும் மர  ஆய்வு பற்றி பிரபாகரன் ,ஜெயபாலன் ஆகியோரும் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாய்  இருந்தனர் .நிறைவு நாளில் அறிவியல் அறிஞர் சுகுமாரன் அவர்களை மாணவர்கள் சந்தித்து பல்லுயிரிகள் பற்றிய விளக்கம் பெற்றனர் .நிறைவு விழாவில் ரூபபர்வதாவின் நடனத்தைத்தொடர்ந்து , புதுக்கோட்டை மாவட்டகல்வி அலுவலர் பரமசிவம் அவர்கள் மானவர்களைப் பாராட்டி  சான்றிதழ்கள் வழங்கினார்.சேதுராமன் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுக்க ,வீரமுத்து அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது .    .

பழி தவிர்த்த பாவலர் என்ற நாடகத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி

நாடக அரங்கம்

புது கை மணிமன்றம் நாடகம் சார்ந்த இலக்கிய குழுவாகும். இதன் சார்பாக பல நாடக ஆக்கங்கள் அரங்கேற்றப் பட்டுள்ளன.
1964 முதல் தன் கலைப்பணியைத் தொடர்ந்து நடத்தி வந்து கொண்டுள்ள இந்நிறுவனம் இதனுடன் பல சமூகத் தொண்டுகளையும் ஆற்றி வருகிறது.