வியாழன், 28 நவம்பர், 2013

இவர்கள் இன்று வந்தால்..!!!

                 புதுக்கோட்டை நகர் மன்றத்தில் 23.11.2013 அன்று நடந்த  திருக்குறள் கழக 59ஆவது ஆண்டுவிழாவில் புதுக்கோட்டை மணிமன்றத்தின் கலைப்பிரிவாகிய மணிச்சுடர் கலைக்கூடம் “இவர்கள் இன்று வந்தால்...!!!? “ என்னும் நடப்பியல் நாடகத்தை நடத்தியது.

                பாவலர் பொன்.கருப்பையா எழுதி இயக்கிய இந்த நாடகத்தில்  திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் ஆகியோர் இன்று வந்தால் இன்றைய சமுதாயத்தின் அவலங்கள் பற்றி என்ன சொல்வார்கள் என்பது பற்றி நகைச்சுவையுடனான  ஓரரங்கக் காட்சி அரங்கேறியது.

                தாய்மொழி வழிக்கல்வி சிதைப்பு, அந்நிய மோகம், பெண்ணடிமைத்தனம், அயலகங்களில் தமிழினப் பாதிப்பு, அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுப்பு, இல்வாழ்க்கையின் இடர்கள் முதலியன பற்றிய இன்றைய நிலையும் அன்றைய அவர்களின் கருத்தும் நகைச்சுவையோடான  நடிப்புரையாடல் மூலம் பார்வை யாளர்களுக்கு வழங்கப்பட்டது.

               திருவள்ளுவராக பொன்.க.மதிவாணன், பாரதிதாசனாக கோ.வள்ளியப்பன், பாரதியாராக புலவர் மகா.சுந்தர்  மாங்காட்டுக் கூத்தனாக சிதம்பர ஈசுவரன், நல்லமுத்துவாக இராச.செய்சங்கர் ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.

            தோற்றப் பொலிவிலும் உரையாடலிலும், நடிப்பிலும் ஒருவரையொருவர் விஞ்சி நின்றனர்.   இசையமைப்பினை இராசசேகர் செய்திருந்தார்.

              35 நிமிடங்கள் காட்சி மாற்றமில்லாமல் தொடர்ந்து நடந்த இந்நாடகம் பார்வை யாளர்களால் மிகவும் பாராட்டப் பட்டது.

             சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்திருந்த  முனைவர் மறைமலை இலக்குவனார் இயக்குநரையும் பங்கேற்றவர்களையும் பாராட்டி ஆடை போர்த்திச் சிறப்பித்தார்.

            ஊடகவியலார் அய்யநாதன், பொறிஞர்  விடுதலை வேந்தன் , விருது பெற்ற முனைவர் திராவிடமணி, மருத்துவர் ச.இராமதாசு, அறமனச் செம்மல் சீனு சின்னப்பா, ஆலங்குடி இராமச்சந்திரன் செட்டியார், முத்துசீனிவாசன், கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலவன்ஆகியோர் பாராட்டினர்.

             கவிஞர் முத்துப் பாண்டி, வேதையன் மற்றும் புதுக்கோட்டை இலக்கிய அமைப்பினர், த.மு.எ.க.ச. வினர், மணிமன்றத் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் சுப.இராசேந்திரன், உறுப்பினர்கள் ஆ.செல்வராசு, கவிஞர் மு.கீதா, கவிஞர் செ.சுவாதி, வெ.பரமசிவம், கவிஞர் மா.கண்ணதாசன், இளங்கோ, தமிழ்மணி ஆகியோர் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள்.

            ஒலி ஒளி அமைப்பினை சாந்தி ஒலியகத்தார் சிறப்பாகச் செய்திருந்தனர்.

            காணொளிப் பதிவினை மதி.பிறைநுதல்செல்வி செய்திருந்தார். ஒளிப்படப் பதிவினை டீலக்சு சேகர் செய்திருந்தார்.

பொன்விழா ஆண்டை நோக்கிய மணிமன்றப் பயணத்தில் இந்நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்கப் பதிவாக அமைந்தது.

1 கருத்து:

  1. ஐயா வணக்கம். தங்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு மைல் கல்லே. காலம் இவற்றைப் பதிவுசெய்யும். (என்றாலும் நாமும் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்- செய்தீர்களா தெரியவில்லை) படங்களை ஏன் இடவில்லை? முப்பெரும் புலவர்களாக வந்த மதி, வள்ளி, சுந்தர் மூவரின் நடிப்பும், உச்சரிப்பும் அருமை. அந்தக் கம்பீரம் கண்ணிலேயே நிற்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு