வியாழன், 23 பிப்ரவரி, 2012

மணிமன்றம் - திசம்பர்த் திங்கள் மன்றக் கூட்டம்

          மணிமன்றத்தின் திசம்பர்த் திங்கள் கூட்டம் 19.12.2011 மாலை 6 மணிக்கு வழக்கமான விடுதியில் தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
              பொருளாளர் திரு சு.இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.
1. 11.12.2011 அன்று மணிச்சுடர் கலைக்கூடம் புதுக்கோட்டை ஐசுவர்யா அரங்கில் கவிராசன் இலக்கியப் பேரவை சார்பில் நடத்திய பாரதியார் பிறந்த நாள் விழாவில் ” இவர்களும் இன்றும்” என்னும் சமூக இயல்பியல் நாடகம் நடத்தியது. பாவலர் பொன்.க அவர்கள்  எழுதி இயக்கிய அந்நாடகத்தில் திருவள்ளுவராக புலவர் மு.பா அவர்களும், பாரதியாராக தமிழாசிரியர் மகா.சுந்தர் அவர்களும், பாரதிதாசனாக திரு வள்ளியப்பன் அவர்களும், கூத்தரசனாக திரு.சிதம்பர ஈசுவரன் அவர்களும் நல்லமுத்துவாக திரு இராச.ஜெய்சங்கர் அவர்களும் சிறப்பாக பங்கேற்று நடித்திருந்தனர். கதை மாந்தர்களை பொன்.க.மதிவாணன் ஒப்பனையில் உருவாக்கியிருந்தது சிறப்பு.
விழாவில் கலந்து கொண்ட  ,இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் திரு தா.பாண்டியன், கவிச்சுடர் கவிதைப்பித்தன், மேனாள் அமைச்சர் உபயத்துல்லா ஆகியோர் நாடகத்தை வெகுவாகப் பாராட்டினர். பங்கு பெற்ற மன்ற உறுப்பினர்களுக்கு மன்றத்தின் சார்பாக நூல்கள் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது.
2.  18.12.2011அன்று புதுக்கோட்டை இலக்கியப் பேரவையில் ” முத்தமிழ்ச் சுடர்” விருது பெற்ற மன்றத் துணைச் செயலாளர் திரு மகா.சுந்தர் அவர்களுக்குப் பாராட்டு செய்யப்பட்டது.
3.   அண்மையில் சச்சரவுக்குள்ளாகி யிருக்கும் ” முல்லை பெரியாறு” பிரச்சனை பற்றி மன்ற நிருவாகி பாவலர்   பொன்.கருப்பையா அவர்கள் விளக்கவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்திய கேரள அரசின் தவறான போக்கையும் அணையின் நீர்மட்டம் உயர்த்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் தலையிட்டு இரு மாநிலங்களுக்கிடையே உருவாகியுள்ள கசப்பான போக்கிற்குச் சுமூகமான தீர்வு காண வேண்டித் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
                   கூட்ட நிறைவில் துணைச் செயலாளர் திரு மகா.சுந்தர் அவர்கள் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக