ஞாயிறு, 6 நவம்பர், 2011

கூடங்குளம் அணுஉலை-ஒரு பார்வை.

                மணிமன்றத்தின் நவம்பர்த் திங்கள் கூட்டம் தி.பி.2042 துலைத் திங்கள் 20 ஆம் நாள், வழக்கமான கூட்ட அரங்கில் நடை பெற்றது. மன்றத் தலைவர். திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையேற்றார். துணைச் செயலாளர் திரு நா. செந்தில் பாண்டியன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். 
 கூடங்குளம் அணுமின் உலை பற்றிய கருத்துகளை மன்ற உறுப்பினர்கள் பதிவு செய்தனர். அணுமின் கழகத்தின் நிலைப்பாடு மற்றும் அணுமின் உலை அகற்றக் கோரும்  போராட்டக் குழுவின் கோரிக்கைகள் பற்றிய கலந்தாய்வு நடந்தது.  
                   அறிவியல் மக்களுக்காகவே, அணுவின் சக்தி ஆக்கத்திற்காகவே என்னும் அடிப்படையில் அணுமின் சக்தியின் அவசியம் இன்றியமையாதது என்றாலும்,  மக்களுக்காகவே திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் நலன் பறிபோவது என்பது சனநாயக நாட்டில் பொருத்தமில்லாததாக உணரப் படுகிறது. வேண்டாம் என்று போராட்டக்குழு வைக்கும் வாதங்கள் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப் படும் என்பது. அணு ஈணுலைக் கழிவான புளுடோனியம்  மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுமா? இல்லை அணு ஆயுதங்கள் செய்யப் பயன் படுத்தப்படுமா? உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு குறைந்த மின்பயனும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும்பயனும் கிடைப்பதற்காக,  மிலியன் ஆண்டுகளானாலும் அழியாத கழிவுகள் கடலடியிலோ. நிலத்தடியிலோ புதைக்கப் பட்டால் , நீர் நில வளங்கள் கெட்டுவீடும் அபாயம் உள்ளது.  பராமரிப்புக் குறைவு மற்றும் இயற்கைச் சீற்றப் பாதிப்புகளால் அணுக்கதிரியக்கக் கசிவு ஏற்படின் நான்கு மாவட்ட மக்களின் இன்றைய மற்றும்  எதிர்காலத் தலைமுறை இனம்தெரியா பல்வேறு உள, மன. நோய்களின் பாதிப்புகளை ஏற்க வேண்டுமா? அணுமின் உற்பத்திக்கான அடிப்படையான யுரேனியம் தாதுவிற்கு அந்நிய நாட்டை நம்பியிருக்க வேண்டிய நிலையில் , எதிர்கால வெளியுறவுக் கொள்கை முரண்பாடுகளால் யுரேனியம் தாது கிடைக்காது போயின்  அணுஉலையின் செயல்பாடு என்னவாகும்?  போன்ற போராட்டக்குழுவின் வாதங்களும் கருத்தில் கொள்ளப் பட வேண்டும். எனவே மக்களின் வாழ்வாதாரப்  பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை அணுமின் கழகக் குழு உணரச் செய்த பின்னர் அணுமின் உற்பத்திப் பணியினைத் தொடங்குவது  சாலச் சிறந்ததாகும் என்கின்ற  கருத்தினை இச்சமூக நற்பணிமன்றம் வரவேற்கிறது.
          நிருவுனர் பாவலர் பொன்.க  அவர்கள் உறுப்பினர் கருத்துத் தொகுப்புகளைப் பதிவு செய்தார். நிறைவில் துணைச் செயலாளர் திரு  மகா.சுந்தர் அவர்கள் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக