ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

விழா - 49 நன்றி அறிவிப்புக் கூட்டம்

             புதுக்கோட்டை மணிமன்றம்- மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது ஆண்டு முப்பெரும் விழா தொடர்பான நன்றி அறிவிப்புக் கூட்டம் தி.பி 2044 கடகம் 19 ஆம் நாள்          ( 04.08.2013 ) மாலை மணிமன்றத் தலைவர் திரு.பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் இல்லத்தில் அவர் தலைமையி்ல் நடைபெற்றது. மன்றத் துணைத் தலைவர் திரு நா.செந்தில்பாண்டியன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தின் பொருள் 
                                              1. ஆண்டுவிழா பற்றிய கருத்துப் பகிர்வு
                                              2. நன்றி அறிவிப்பு
                                              3. வரவு செலவு ஒப்புதல்
                                              4. அ.பெ.கா  அமைப்பில் நாடகம்
                     முதலாவதாக 49 ஆவது ஆண்டு முப்பெரும் விழா தொடர்பான உறுப்பினர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

                    மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன், விழா பொதுவாக சிறப்பாக கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக இருந்ததையும், அரங்கேற்றம் செய்யப் பட்ட நாடகம் இன்னும் பயிற்சி அளிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதையும் நிருவனரின் பெருமுயற்சியோடு அனைவரின் கூடுதல் ஒத்துழைப்புத் தேவை என்பதையும் பதிவு  செய்தார்.


                  கவிஞர் மு.கீதா அவர்கள் அரசுப் பள்ளி முதல்மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதும் முழுத்தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டதையும் பாராட்டினார். ஒரு விழா எப்படி நடக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு நடத்தியமை சிறப்பு என்பதையும் பதிவு செய்தார்.


                 கோ.வள்ளியப்பன் தனது கருத்தாக கடந்த ஆண்டினைக் காட்டிலும் அதிகமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் முழுத்தேர்ச்சி அரசுப் பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது சிறப்பு என்பதையும். புதிய கண்டுபிடிப்பு மற்றும் மாணவச் சாதனையாளர்களுக்கு இது போல யாரும் விருதுகள் வழங்கியது இல்லை என்பதையும் பதிவு செய்தார்.


                  கோகர்ணேசன் தனது மாணவப் பருவத்திலிருந்து மன்றத்தின் மூலம் இத்தகு சேவையில் ஈடுபட்டு வருவதையும், தனது குடும்ப மற்றும் தொழில் நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டுகளைப் போல முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க முடியாமைக்கு வருந்தியும் தனக்களி்க்கப்பட்ட அன்றையப் பணிகளை செவ்வனே முடித்தமையையும் கூறினார்.


                  கண்ணதாசன் ,கல்வி மற்றும் சமூக சேவை செய்யும் மன்றத்தின் செயல்களால் ஈர்க்கப் பட்டுத் தானாக இம்மன்றத்தில் இணைந்ததையும், நிருவாகியின் தனித்தமிழ்ப் பற்று மற்றும் விடாமுயற்சியாலும் இது போன்ற சேவையினைத் தொடர்ந்து ஆற்ற முனைவதாகக் கூறினார். விருதுகள் வழங்கிய கைப்பையில் மன்றத்தின் பெயர் பொறித்திருக்கலாம் என்ற ஆலோசனையினையும் பதிவு செய்தார்.


                   இரா.சங்கரநாராயணன் தனது கருத்தாக. இவ்வாண்டு விழாக்களை விட மிகச் சிறப்பாக இருந்ததாக பார்வையாளர்கள் கருதியதைப் பதவு செய்தார். 


                 நா.செந்தில் பாண்டியன் தான் நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகே இம்மன்றத்தில் இணைய முடிந்தது என்பதையும். இணைந்த பின்னர் தனக்களிக்கப்பட்ட எந்தப் பணியையும் தாழ்வின்றிச் செய்து வருவதாகக் கூறினார். மேலும் இத்தகு சேவையினால் பொதுவாழ்க்கையில் தனது செயல்பாட்டில் மதிப்பு மிகுவதாகப் பெருமை கொண்டார். விருது பெற்றவர்கள் தனது பெற்றோர்களுடன் வந்து விருது பெற்றதைப் பெருமையாகக் கருதினர் என்பதைப் பதிவு செய்தார். விழாவில் முதன்மைக் கல்வி அலுவலரின் உரை மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறினார்.


                புலவர் மகா.சுந்தர் கருத்துரைக்கையில் விழாவின் சிறப்பிற்கு ஒலி.ஒளி சிறப்பாக அமைந்தமையைச் சுட்டிக்காட்டினார். முதன்மைக் கல்வி அலுவலர் தனது சொந்த வாழ்க்கைப் பட்டறிவின் மூலம் மாணவர்களுக்குக் கருத்துரைத்தமையையும், அழைத்ததும் வந்து நிறைவுவரை அலுவலர் இருந்து சிறப்பித்ததையும் நெகிழ்வுடன் பதிவு செய்தார். மன்ற பேச்சில்லா நாடகம் இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம் என்பதையும் கருத்தாகச் சொன்னார்.


                மன்ற மூத்த உறுப்பினர் ஆ.செல்வராசு தனது கருத்தாக ஆண்டுக்காண்டு மெருகேறிவரும் மன்றத்தின் செயல் கிராமப்புறப்  பொதுமேடையில் நடத்தப் பட்டால் இன்னும் மன்றத்தின் செயல்பாடுகள் பரவும் என்பதைக் கூறினார்.


              நிறைவாக மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா, இவ்வாண்டு முப்பெரும் விழா சிறப்பாக நடக்க ஒத்துழைத்த அனைத்து மன்ற உறுப்பினர்களுக்கும்,  சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் , முதுநிலை அறிவியலறிஞர் திரு.இரா.இராஜ்குமார். பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்ற உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி, த.மு.எ.க.ச மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்து நிலவன், மருத்துவர் இராமதாசு ஆகியோர்க்கும் , முன்னிலையேற்ற சுப்பிரமணிய காடுவெட்டியார், ஆர் ஏ.குமாரசாமி ஆகியோர்க்கும் , கேளாமலேயே நன்கொடையளித்த பொது நன்கொடை யாளர்களுக்கும், குறிப்பாக ஆண்டுதோறும் கட்டணமில்லாது அரங்கத்தினை வழங்கிவரும் எஸ்.வி.எஸ்.செந்தில் ஆண்டவர், விழாவிற்கு வருகை தந்தவர்க்கெல்லாம் சிற்றுண்டி வழங்கிய திரு சண்முக பழனியப்பன், இனிப்புகள் வழங்கிய அறமனச் செம்மல் சீனு .சின்னப்பா, ரொட்டிகள் வழங்கிய கோடீசுவரா அழகப்பன், விருதுகளுக்கு நிதி யளித்த எஸ.வி.எஸ். செயக்குமார். முரு.வைரமாணிக்கம்,  பரப்புரைக்கு உதவிய வயி.ச.வெங்கடாசலம். மருத்துவர் ச.இராமதாசு, ப.இராமசாமி, ஆர்.ஏ.குமாரசாமி. சுந்தரமூர்த்தி ஆகியோர்க்கும், பொருளாலும், உடலுழைப்பாலும், நிதியாலும் உதவிய மன்ற உறுப்பினர்களுக்கும் ஒளிப்படம் எடுத்த ஸ்டீபன், காணொளிப் பதிவு செய்த மரகதவள்ளி அறக்கட்டளை அறங்காவலர் பொன்.க.மதிவாணன், விருதுபெற்ற மாணவர்கள், பெற்றோர், தலைமையாசிரியர்கள், விழாவிற்கு வந்து சிறப்புச் செய்த புதுக்கோட்டையில் பல்வேறு இலக்கிய , அறிவியல். கலைஇலக்கிய அமைப்பினைச் சேர்ந்தவர்களுக்கும். நிகழ்ச்சியினை நாளேடுகளில் வெளியிட்டு உதவிய நாளேட்டுச் செய்தியாளர்களுக்கும், திருச்சி அகில இந்திய வானொலி, காவல்துறை ஆகியோர்க்கு அமைப்பின் சார்பான நன்றிகளைப் பதிவு செய்தார்.


             அடுத்து வரும் நிகழ்வுகளில் இன்னும் ஆற்றலோடு உறுப்பினர்கள் பணிகளைப் பகிர்ந்து சிறப்பிக்க வேண்டுகோளையும் வைத்தார்.


              பொருளாளர் வரவு செலவு அறிக்கை அளிக்கப் பட்டு மன்றத்தினரின் ஒப்புதல் பெறப்பட்டது.


              அ.பெ.கா.அமைப்பினர் கோரிய நாடகத்தில் நடிக்க மன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கோரப்பட்டது. நாடக வடிவமைப்பு, உரையாடல், பங்குபெறுவோர் எண்ணிக்கை உரியவர்களிடமிருந்து பெறப்பட்டதும் உறுப்பினர்களின் ஒப்புதலை உறுதிசெய்ய முடிவாற்றப் பட்டது.


             நிறைவாக மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக