திங்கள், 22 ஜூலை, 2013

மணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளை 49 ஆவது ஆண்டு முப்பெரும் விழா.

                          மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது முப்பெரும் விழா திருவள்ளுவர் ஆண்டு 2044 கடகம் 4 காரிக்கிழமை    ( 20.07.2013 ) அன்று மாலை 6.00 மணிக்கு, புதுக்கோட்டை எஸ்.வி.எஸ். சீதையம்மாள் திருமண அரங்கில் நடைபெற்றது.  கவிஞர்கள் செ.சுவாதி, மு.கீதா ஆகியோர் விழாவிற்கு வந்தவர்களை இனிதே வரவேற்றனர்.
மன்றத்தின் உறுப்பினர்கள் ஆ.குமார், ச.கோகர்ணேசன் ஆகியோர் விருதாளர் வருகையினைப் பதிவு செய்தனர். 
                     
                    விழாவின் கலைநிகழ்வாக மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் அவர்களின் இருகுரல் இன்னிசை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாற்காலி என்னும் பேச்சில்லா குறு நாடகம் கவிஞர் நீலா தலைமையில் நடைபெற்றது. நாடகத்தில் கவிஞர் செ.சுவாதி, ஆ.குமார், கவிஞர் கண்ணதாசன், வள்ளியப்பன், மணிகண்டன், ஜெய்சங்கர் ஆகியோர் சிறப்பாக நடித்தனர்.

                  முப்பெரும் விழாவின் முதல் நிகழ்வாக “ சாதனையாளர்களுக்குப் பாராட்டு“ விழாவிற்கு மணிமன்றத் தலைவர் பொன.பாலசுப்பிரமணியன் தலைமை ஏற்றார். மாணவச் சாதனையாளர்கள் மேடைக்கு அழைத்து சிறப்பிடத்தில் அமர்த்தப் பட்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடிய   மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா  வரவேற்புரையினை ஆற்றினார். விழாவிற்கு தமிழிசைச் சங்கத் தலைவர் திரு சுப்பிரமணிய காடுவெட்டியார், ஆர்.ஏ.குமாரசாமி ஆகியோர்    முன்னி லை யேற்றனர்.

                   நிகழ்ச்சியினை கவிஞர் ரெ.சு.காசிநாதன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
ஆண்டறிக்கையினை புலவர் மு.பாலசுப்பிரமணியன் அளித்தார்.சிறப்பு விருந்தினர்களுக்கு மன்றச் செயற்குழுவினர் நூல்களை அன்பளித்துச் சிறப்புச் செய்தனர்.

                  தலைவர் உரையினைத் தொடர்ந்து... வாரணாசியில் நடைபெற்ற தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்  “வெப்ப மேம்பாட்டில் சாண எருவாட்டி“ என்னும் ஆய்வினை அளித்து இளம் விஞ்ஞானியாகச் சிறப்புப் பெற்ற தச்சன்குறிச்சி தூயமரியன்னைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஆ.அகஸ்டாவின்  சாதனைகளையும், வேளாண் தொழிலுக்கு புதிய கண்டுபிடிப்பான ” தானியங்கி நீரிறைக்கும் பொறி”    யினைக் கண்டுபிடித்த அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ச.மணிவண்ணன், இரா.சதீஸ்குமார், ஆறு.பாலாஜி ஆகியோரை மரகதவள்ளி அறக்கட்டளையின் அறங்காவலர் பொன்.க.மதிவாணன் அறிமுகம் செய்தார்.
பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புக் கருவியினை அப்பொறியியல் மாணவர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தது சிறப்பாக இருந்தது.  

                 சாதனையாளர் விருதுகளை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன்அவர்கள்   வழங்கினார் . சாதனையாளர்களைக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வாழ்த்தி உரையாற்றினார்.

                அவர் தனதுரையில் மன்றத்தின் தொடர்ந்த இப்பணியினைப் பாராட்டினார். வளரும் சாதனையாளர்களுக்கு முதுகில் செய்ய வேண்டிய ஒரே வேலை அவர்களைத் தட்டிக் கொடுப்பதுதான். சரியான களம் கிடைக்குமானால் நிறையச் சாதனையாளர்கள் உருவாவார்கள்..  போதிப்பதிலும் சாதிக்க வைப்பதே சமுதாய, நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னது சிறப்பாக இருந்தது.

                  அதனையடுத்து இந்தியக் குடியரசுத் தலைவரிடம் “செம்மொழி இளம் தமிழறிஞர் விருது” பெற்ற புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு.மாதவன் அவர்களை கவிஞர் ஆர்.நீலா அறிமுகம் செய்தார். அவருக்கான சாதனை விருதினை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மூத்த அறிவியல் அறிஞர்                                             திரு இரா.இராஜ்குமார் அவர்கள்  வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

                  இரண்டாவது நிகழ்வாக புதுக்கோட்டை மாவட்ட அளவில் 10,12 வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர் எண்மர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களை வாழ்த்தி மருத்துவர் ச.இராமதாசு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் முதல் மூன்று மாணவர்களுக்கான விருதுகளை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் வழங்கினார். த.மு.எ.க.ச . மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன்  முழுத்தேர்ச்சி பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களைப் பாராட்டியும், மாணவர் திறமையினை மதிப்பெண்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை அவர்களை மாண்புள்ள சமூகச் சிந்தனையாளர்களாக உருவாக்கும் வாழ்க்கைக் கல்வியே இன்றியமையாதது என்னும் கருத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.

                விழாவின் நிறைவுரையாக முதன்மைக் கல்வி அலுவலர் அரசுப் பள்ளி மாணவர், ஆசிரியர் சிறப்புத்  திறன்களையும்  கடந்த ஆண்டினைவிட இவ்வாண்டு புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ள நிலைமையினையும் அதிக முழுத்தேர்ச்சிப் பள்ளிகள் அதற்குச் சான்றாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். அவர் தனது கல்விப் பயணத்தின் பட்டறிவினை எடுத்துச் சொல்லி ஒவ்வொருவரின் உயர்வு அவரவர் முனைப்பு ஈடுபாட்டில்தான் இருக்கிறது. எல்லா மாணவரிடத்தும் திறன்கள் அடங்கிக்கிடக்கின்றன அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப் பட்டால் எல்லா நிலைகளிலும் உயர்வார்கள் ... இதில்  பள்ளி வேறுபாடுகள் இல்லை என்பதைப் பதிவு செய்தார்.

               அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகரளவு 17 பள்ளிகளைச் சேர்ந்த 22 முதல் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை தங்கள் பெற்றோருடன் மேடைக்கு வந்து மாணவர்கள் பெற்றது சிறப்பாக இருந்தது. விருதுகளோடு பாராட்டுச் சான்றிதழ், நூல்களும் விருதாளர்களுக்கு வழங்கப் பட்டது. அரங்க ஆளுமையினை நா.செந்தில்பாண்டியன்,சங்கர நாராயணன் கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் செம்மையாய்ச் செய்தனர்.

              மூன்றாவது நிகழ்வாக... புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் மேல்நிலையில் முழுத்தேர்ச்சி பெற்ற கீரமங்கலம், கொத்தமங்கலம், வெண்ணாவல்குடி, கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும்,  இடைநிலைத்தேர்வுகளில் முழுத்தேர்ச்சி பெற்ற குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம், கீழாநிலைக்கோட்டை, மரமடக்கி, பள்ளத்திவிடுதி, சுனையக்காடு, ஆயிங்குடி தெற்கு, தெம்மாவுர், எஸ்.குளவாய்ப்பட்டி, பொன்னன்விடுதி, மோலுடையான்பட்டி, கிருஷ்ணாஜிப் பட்டினம், மதியநல்லூர், வெள்ளாளவிடுதி, திருமணஞ்சேரி, சூரன்விடுதி, கே.ராசியமங்களம், மேலூர், திருவப்புர் ஆகிய 23 பள்ளிகளுக்கான   “முழுத்தேர்ச்சி விருது“களை முதன்மைக் கல்வி அலுவலர் வழங்க அவ்வப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பெற்றுமகிழ்ந்தனர்.

             முதல் மாணவர்களை மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தரும், முழுத்தேர்ச்சிப் பள்ளிகளை மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரனும் அறிமுகம் செய்தனர்.

           விழா பற்றிய பின்னூட்டக்கருத்தினை கொத்தமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வழங்கினார்.

            விருது பெற்றவர் சார்பாக முனைவர் சு.மாதவன் ஏற்புரை வழங்கினார்.
மன்றத் துணைத் தலைவர் நா.செந்தில்பாண்டியன் நன்றியுரையாற்றினார்.

            வருகைபுரிந்த அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. விருது பெற்றோர்க்கு பதிவின்போது அடையாள அட்டையும்  ரொட்டிப் பொட்டலமும் வழங்கப் பட்டது.
விழா இரவு 9.15க்கு நிறைவுற்றது. தொலைவிலிருந்து விருதுபெற வந்தவர்களுக்குப் பயணப்படி வழங்கப் பட்டது.

             அரங்கிலிருந்த அனைவருக்கும் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன் அவர்கள் சார்பாக சிற்றுண்டி வழங்கப்பட்டது. விருந்தோம்பல் பணியினை வெ.பரமசிவம், சு.இராசேந்திரன், கவிஞர்கள் செ.சுவாதி, கீதா, வள்ளியப்பன், சங்கரநாராயணன், இளந்தொண்டர்கள் சொ.இளங்கோ, கு.தமிழ்மணி  ஆகியோர்  கனிவுடன் ஆற்றினர்.

           விருதோடு விருந்தும் உண்டு மகிழ்வோடு திரும்பினர் அனைவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக