திங்கள், 18 ஜூலை, 2011

2011 ஐம்பெரும் விழா அழைப்பிதழ்.

புதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டுவிழா ,ஐம்பெரும் விழாவாக, வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு  2042 கடகம் 7 ஆம் நாள் ( 23.07.2011) காரி(சனி)க்கிழமை, புதுக்கோட்டை சாந்தநாதபுரம், எஸ்.வி.எஸ் சீதையம்மாள் திருமண அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. மன்றத்தின் தலைவர் திரு பொன்.பால சுப்பிரமணியன் விழாவிற்குத் தலைமை தாங்குகிறார்.
                  விழாவின் முதல் நிகழ்வாக கலைவிழா நடைபெறஉள்ளது. செல்வி பா.ரூபபர்வதா ஆடல்கலை நிகழ்த்துகிறார். அதனைத் தொடர்ந்து மணிச்சுடர் கலைக்கூடம் வழங்கும் ” பழிதவிர்த்த பாவலர் ” என்னும் சங்க இலக்கிய நாடகக் காணொளிப் படக்காட்சி திரையிடப்படுகிறது.
        நிறுவுனர் புலவர் பொன்.கருப்பையா வரவேற்புரை வழங்க உள்ளார். செயலாளர் சிதம்பர ஈசுவரன்  ஆண்டு அறிக்கை வழங்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து,குழந்தைகள் நல மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் முன்னிலையில்  புலவர் பொன்.கருப்பையா அவர்களின் ” திருப்புக தேரை” என்னும் சங்க இலக்கியக் குறுநாடக நூலினை புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் தமிழ்த்திரு எம்.எஸ்.முத்துச்சாமி அவர்கள் வெளியிட உள்ளார். முதல் நூலினை  புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் தமிழ்த்திரு சீனு.சின்னப்பா அவர்கள் பெற்றுக் கொள்கிறார். அந்நூலினை சாகித்திய அகாதமி ஆலோசனைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் அறிமுகம் செய்யவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் திறனாய்வு செய்யவும் உள்ளனர்.
           மூன்றாவது விழாவாக, சாதனை படைத்த இளம் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு செய்யப்படுகிறது. திருவண்ணாமலை திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி மாணவர் சே.இராஜேஸ், புதுக்கோட்டை அரியாணிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் இல.பிரபு, ஆவுடையார் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி க.மகாலெட்சுமி ஆகிய மாணவச் சாதனையாளர்கள், அவர்களின் அறிவியல் ஆய்வுகளுக்காகப் பாராட்டப்பட உள்ளனர்..இவர்களை தஞ்சாவுர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக உயிர் தொழில் நுட்பத்துறைத் தலைவர் முனைவர் வெ.சுகுமாறன் அவர்கள்  பாராட்டி விருது வழங்க உள்ளார்.
          நான்காம் விழாவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2010-11 கல்வி யாண்டில் இடைநிலை, மேல்நிலை அரசுப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும்  புதுக்கோட்டை நகர அளவில் உள்ள அனைத்து அரசு, மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளிலும் பயின்று பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் ” முதல் மாணவர் விருது” விருதுகளை, புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் தமிழ்த்திரு ரெ.பரமசிவம் அவர்கள் வழங்கிப் பாராட்டுரை செய்கிறார். முதல் மாணவர்களுக்கு,  கைக்குறிச்சி சுபபாரதி கல்விநிறுவனங்களின் தலைவர் தமிழ்த்திரு ஜி.தனசேகரன், வெங்கடேசுவரா கல்வி நிறுவனத் தலைவர் தமிழ்த்திரு இராம.வ.கதிரேசன் , தொலைதொடர்புத் துறைக் கோட்டப் பொறியாளர் தமிழ்த்திரு கவிஞர் நிலவை.ந.பழனியப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
        ஐந்தாம்  விழாவாக, கடந்த கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைநிலை, மேல்நிலைத் தேர்வுகளில் முழுத்தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு, புதுக்கோட்டை உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் தமிழ்த்திரு சண்முக பழனியப்பன் அவர்கள் முன்னிலையில்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழ்த்திரு ரெ.பரமசிவம் அவர்கள் விருதுகள் வழங்கிச் சிறப்பி்க்கிறார்.
                   கீழ்க்கண்ட பள்ளிகள் அவ்விருதினைப் பெறகின்றன.
1.அரசு மேல்நிலைப்பள்ளி-மறமடக்கி, 2.அரசு மேல்நிலைப் பள்ளி-தாஞ்சூர்,3.அரசுமேல்நிலைப்பள்ளி-கல்லூர்.4.அரசு உயர்நிலைப் பள்ளி- ஆயிங்குடி,5.அரசு உயர்நிலைப் பள்ளி-கீழையுர்,6.அரசு உயர்நிலைப்பள்ளி-இராசேந்திரபுரம்,7.அரசு உயர்நிலைப்பள்ளி-கிருஷ்ணாஜி பட்டினம்,8.அரசு உயர்நிலைப்பள்ளி- கிளாங்காடு, 9.அரசு உயர்நிலைப்பள்ளி-குருங்களுர்,10.அரசு உயர்நிலைப்பள்ளி,தாழனூர்,11.அரசு உயர்நிலைப் பள்ளி- போசம்பட்டி.
          மேற்கண்ட விழா நிகழ்வுகளை புலவர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் தொகுத்து வழங்க இருக்கிறார். விழா நிறைவில் மரகதவள்ளி அறக்கட்டளையின் அறங்காவலர் க.மதிவாணன் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்.
         புதுக்கோட்டையின் புகழ்மிக்க அறமனச் செம்மல்களின் பேராதரவோடு சிறப்பாக நடைபெற உள்ள இவ்விழாவிற்குத் தங்களின் வருகையையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக