மணிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 பிப்ரவரி, 2012

மணிமன்றம் - திசம்பர்த் திங்கள் மன்றக் கூட்டம்

          மணிமன்றத்தின் திசம்பர்த் திங்கள் கூட்டம் 19.12.2011 மாலை 6 மணிக்கு வழக்கமான விடுதியில் தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
              பொருளாளர் திரு சு.இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.
1. 11.12.2011 அன்று மணிச்சுடர் கலைக்கூடம் புதுக்கோட்டை ஐசுவர்யா அரங்கில் கவிராசன் இலக்கியப் பேரவை சார்பில் நடத்திய பாரதியார் பிறந்த நாள் விழாவில் ” இவர்களும் இன்றும்” என்னும் சமூக இயல்பியல் நாடகம் நடத்தியது. பாவலர் பொன்.க அவர்கள்  எழுதி இயக்கிய அந்நாடகத்தில் திருவள்ளுவராக புலவர் மு.பா அவர்களும், பாரதியாராக தமிழாசிரியர் மகா.சுந்தர் அவர்களும், பாரதிதாசனாக திரு வள்ளியப்பன் அவர்களும், கூத்தரசனாக திரு.சிதம்பர ஈசுவரன் அவர்களும் நல்லமுத்துவாக திரு இராச.ஜெய்சங்கர் அவர்களும் சிறப்பாக பங்கேற்று நடித்திருந்தனர். கதை மாந்தர்களை பொன்.க.மதிவாணன் ஒப்பனையில் உருவாக்கியிருந்தது சிறப்பு.
விழாவில் கலந்து கொண்ட  ,இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் திரு தா.பாண்டியன், கவிச்சுடர் கவிதைப்பித்தன், மேனாள் அமைச்சர் உபயத்துல்லா ஆகியோர் நாடகத்தை வெகுவாகப் பாராட்டினர். பங்கு பெற்ற மன்ற உறுப்பினர்களுக்கு மன்றத்தின் சார்பாக நூல்கள் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது.
2.  18.12.2011அன்று புதுக்கோட்டை இலக்கியப் பேரவையில் ” முத்தமிழ்ச் சுடர்” விருது பெற்ற மன்றத் துணைச் செயலாளர் திரு மகா.சுந்தர் அவர்களுக்குப் பாராட்டு செய்யப்பட்டது.
3.   அண்மையில் சச்சரவுக்குள்ளாகி யிருக்கும் ” முல்லை பெரியாறு” பிரச்சனை பற்றி மன்ற நிருவாகி பாவலர்   பொன்.கருப்பையா அவர்கள் விளக்கவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்திய கேரள அரசின் தவறான போக்கையும் அணையின் நீர்மட்டம் உயர்த்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் தலையிட்டு இரு மாநிலங்களுக்கிடையே உருவாகியுள்ள கசப்பான போக்கிற்குச் சுமூகமான தீர்வு காண வேண்டித் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
                   கூட்ட நிறைவில் துணைச் செயலாளர் திரு மகா.சுந்தர் அவர்கள் நன்றி கூறினார்.

திங்கள், 26 செப்டம்பர், 2011

செம்மல்கள் பிறந்த செப்தெம்பர் திங்களில்..

          திருவள்ளுவர் ஆண்டு 2042 கன்னித் திங்கள் 9ஆம் நாள் திங்கள் கிழமை மணிமன்றத்தின் திங்கள் கூட்டம், மன்றத் தலைவர் திரு பொன்.பால சுப்பிர மணியன் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. செப்தெம்பர்ச் செம்மல்களின் சிறப்புகள் போற்றப்பட்டன. செப்-5ல் பிறந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், நாடகத்தந்தை சங்கரதாசு அடிகள், மேனாள் குடியரசுத் தலைவர்  முனைவர் இராதாகிருட்டினன்,தமிழறிஞர் சாலை இளதிரையன் (செப் -6 )முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்( செப்-10) பேரறிஞர் சி.ந.அண்ணாத்துரை (செப்-15) அரசன் சண்முகனார், பகுத்தறிவுப் பகலவன் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்  ஈ.வே.ரா (செப்-17) ,உடுமலை நாராயணகவி ( செப்-25 ) பாவலர் பெரியசாமி தூரன், சி.பா.ஆதித்தனார்   (செப்-27 )  மாவீரன் பகத்சிங் ( செப்- 28 ) திருக்குறள் முனுசாமி ( செப்-29 ) ஆகியோரது பிறந்தநாள்களும், இத்திங்களின் மறைந்த பேரா.இலக்குவனார் (செப்-3) அன்னை தெரசா ( செப்-5) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ( செப்-11 ) தமிழ்க்கடல் மறைமலையடிகள் ( செப்-15 )  தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரம் ( செப்-17) இரட்டைமலை சீனிவாசன் (செப்-18) புலவர் குழந்தை ( செப்-24) தமிழவேள் பி.டி.இராசன் ( செப்-25 ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ( செப்-26 ) ஆகியோரின் நினைவுகளும் போற்றப்பட்டன. 
              ஊழல்களுக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்துகளை துண்டறிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் பரப்பிட வேண்டிய இன்றியமையாமை பற்றியும் முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன. மன்றத்தின் துணைச் செயலாளர் திருமதி .அரங்க.நீலா அவர்களின் ” கற்றது சிறையளவு” ” சக்கரவாகப் பறவைகள்”"Education within Iron bars" ஆகிய மூன்று நூல்கள்  25.09.2011 அன்று ஆலங்குடியில் அறிவொளி நாயகி திருமதி ஷீலாராணி சுங்கத் அவர்களால் வெளியிடப் பட்டதற்கும், மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தர் அவர்கள் செப் -5ல் புதுக்கோட்டை கவிராசன் இலக்கியப் பேரவையால் நல்லாசிரியர் விருது பெற்றமையையும் மன்றம் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தது.

புதன், 25 மே, 2011

நாடக அரங்கம்

புது கை மணிமன்றம் நாடகம் சார்ந்த இலக்கிய குழுவாகும். இதன் சார்பாக பல நாடக ஆக்கங்கள் அரங்கேற்றப் பட்டுள்ளன.
1964 முதல் தன் கலைப்பணியைத் தொடர்ந்து நடத்தி வந்து கொண்டுள்ள இந்நிறுவனம் இதனுடன் பல சமூகத் தொண்டுகளையும் ஆற்றி வருகிறது.