வியாழன், 12 செப்டம்பர், 2013

பாரதியார் நினைவு நாள் வழக்காடு மன்றம்

            11.09.2013 அன்று புதுக்கோட்டை நேஷனல் அகாதமி அரங்கில், மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை ” பாரதியார் கனவு கண்ட சமுதாயம் மலரவில்லை” என்னும் வழக்காடு மன்ற நிகழ்வினை நடத்தியது.

            நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

           மன்றச் செயலாளர் திரு சிதம்பர ஈசுவரன் பாரதியார் பாடலோடு வரவேற்புரையாற்றினார்,இந்நிகழ்வில் மன்ற உறுப்பினர்களே பங்கேற்றனர்.

         வழக்காடு மன்ற நடுவராக முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்கள் இருந்தார். 

          பெண்சமத்துவம், தாய்மொழி, சமதர்ம சமுதாயம் பற்றிப் பாரதியார் கண்ட கனவுகள் நனவாக வில்லை எனக் கவிஞர் மு.கீதா, திரு கோ.வள்ளியப்பன் ஆகியோர் வழக்குத் தொடுத்தனர்.

         புலவர் மகா.சுந்தர், கவிஞர் செ.சுவாதி ஆகியோர் வழக்கினை மறுத்தனர்.
இருசாராரும் பாரதியாரின் கவிதைகளையும் இன்றைய சமுதாய நிகழ்வுகளையும் சான்றுகாட்டி வாதிட்டனர்.

         வழக்கிளை ஆய்வு செய்த நடுவர், பெண்களின் இன்றைய அனைத்துத் துறை முன்னேற்றம், தமிழ்மொழி ஆட்சிமொழி, மருத்துவ, வழக்காடுமன்ற கணினி  மொழியாக வளர்ந்திருப்பது, சமதர்ம வளர்ச்சி இவற்றை ஒப்புநோக்கி, பாரதியார் கண்ட கனவு நனவாகி வருகிறது எனத் தீர்ப்பளித்து வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

        நிகழ்ச்சிக்கு வருகைதந்த சிறப்பு அழைப்பாளர்கள் கவிஞர் நா.முத்துநிலவன், திருவருள் பேரவைத் தலைவர் இரா.சம்பத்குமார் , எழுத்தாளர் கிருஷ்ணவரதராசன் ஆகியோர் வழக்காடு மன்றம் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்து வழக்காடு மன்றத்தில்




பங்கேற்றவர்களுக்கு நூல்களைப் பரிசாக வழங்கிச் சிறப்பித்தார்கள்.

        நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்த மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் நன்றி கூறினார்.

        தொடர் மழையிலும், நிகழ்ச்சிக்கு மணிமன்ற உறுப்பினர்கள் நா.செந்தில்பாண்டியன், கவிஞர் கண்ணதாசன் , மணிகண்டன் ஆகியோரோடு, முத்துப் பாண்டியன், நண்பா அறக்கட்டளை கார்த்திக், நேஷனல் அகாதமி நாகரெத்தினம் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் வருகை தந்தது சிறப்பு.

       மணிமன்றப் பொன்விழா ஆண்டின் தொடக்க நிகழ்வு ஒரு பொது நிகழ்வாக நடந்தது குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்வின் போது கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் மன்ற உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டது  மன்றத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும்.  

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நன்றி அறிவிப்பு -49

தி.பி.2044 கடகம் 19 ஆம் நாள் ( 04.08.2011 ) நடைபெற்ற மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆம் ஆண்டு முப்பெரும்விழா - நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் .

விழா - 49 நன்றி அறிவிப்புக் கூட்டம்

             புதுக்கோட்டை மணிமன்றம்- மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது ஆண்டு முப்பெரும் விழா தொடர்பான நன்றி அறிவிப்புக் கூட்டம் தி.பி 2044 கடகம் 19 ஆம் நாள்          ( 04.08.2013 ) மாலை மணிமன்றத் தலைவர் திரு.பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் இல்லத்தில் அவர் தலைமையி்ல் நடைபெற்றது. மன்றத் துணைத் தலைவர் திரு நா.செந்தில்பாண்டியன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தின் பொருள் 
                                              1. ஆண்டுவிழா பற்றிய கருத்துப் பகிர்வு
                                              2. நன்றி அறிவிப்பு
                                              3. வரவு செலவு ஒப்புதல்
                                              4. அ.பெ.கா  அமைப்பில் நாடகம்
                     முதலாவதாக 49 ஆவது ஆண்டு முப்பெரும் விழா தொடர்பான உறுப்பினர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

                    மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன், விழா பொதுவாக சிறப்பாக கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக இருந்ததையும், அரங்கேற்றம் செய்யப் பட்ட நாடகம் இன்னும் பயிற்சி அளிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதையும் நிருவனரின் பெருமுயற்சியோடு அனைவரின் கூடுதல் ஒத்துழைப்புத் தேவை என்பதையும் பதிவு  செய்தார்.


                  கவிஞர் மு.கீதா அவர்கள் அரசுப் பள்ளி முதல்மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதும் முழுத்தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டதையும் பாராட்டினார். ஒரு விழா எப்படி நடக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு நடத்தியமை சிறப்பு என்பதையும் பதிவு செய்தார்.


                 கோ.வள்ளியப்பன் தனது கருத்தாக கடந்த ஆண்டினைக் காட்டிலும் அதிகமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் முழுத்தேர்ச்சி அரசுப் பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது சிறப்பு என்பதையும். புதிய கண்டுபிடிப்பு மற்றும் மாணவச் சாதனையாளர்களுக்கு இது போல யாரும் விருதுகள் வழங்கியது இல்லை என்பதையும் பதிவு செய்தார்.


                  கோகர்ணேசன் தனது மாணவப் பருவத்திலிருந்து மன்றத்தின் மூலம் இத்தகு சேவையில் ஈடுபட்டு வருவதையும், தனது குடும்ப மற்றும் தொழில் நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டுகளைப் போல முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க முடியாமைக்கு வருந்தியும் தனக்களி்க்கப்பட்ட அன்றையப் பணிகளை செவ்வனே முடித்தமையையும் கூறினார்.


                  கண்ணதாசன் ,கல்வி மற்றும் சமூக சேவை செய்யும் மன்றத்தின் செயல்களால் ஈர்க்கப் பட்டுத் தானாக இம்மன்றத்தில் இணைந்ததையும், நிருவாகியின் தனித்தமிழ்ப் பற்று மற்றும் விடாமுயற்சியாலும் இது போன்ற சேவையினைத் தொடர்ந்து ஆற்ற முனைவதாகக் கூறினார். விருதுகள் வழங்கிய கைப்பையில் மன்றத்தின் பெயர் பொறித்திருக்கலாம் என்ற ஆலோசனையினையும் பதிவு செய்தார்.


                   இரா.சங்கரநாராயணன் தனது கருத்தாக. இவ்வாண்டு விழாக்களை விட மிகச் சிறப்பாக இருந்ததாக பார்வையாளர்கள் கருதியதைப் பதவு செய்தார். 


                 நா.செந்தில் பாண்டியன் தான் நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகே இம்மன்றத்தில் இணைய முடிந்தது என்பதையும். இணைந்த பின்னர் தனக்களிக்கப்பட்ட எந்தப் பணியையும் தாழ்வின்றிச் செய்து வருவதாகக் கூறினார். மேலும் இத்தகு சேவையினால் பொதுவாழ்க்கையில் தனது செயல்பாட்டில் மதிப்பு மிகுவதாகப் பெருமை கொண்டார். விருது பெற்றவர்கள் தனது பெற்றோர்களுடன் வந்து விருது பெற்றதைப் பெருமையாகக் கருதினர் என்பதைப் பதிவு செய்தார். விழாவில் முதன்மைக் கல்வி அலுவலரின் உரை மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறினார்.


                புலவர் மகா.சுந்தர் கருத்துரைக்கையில் விழாவின் சிறப்பிற்கு ஒலி.ஒளி சிறப்பாக அமைந்தமையைச் சுட்டிக்காட்டினார். முதன்மைக் கல்வி அலுவலர் தனது சொந்த வாழ்க்கைப் பட்டறிவின் மூலம் மாணவர்களுக்குக் கருத்துரைத்தமையையும், அழைத்ததும் வந்து நிறைவுவரை அலுவலர் இருந்து சிறப்பித்ததையும் நெகிழ்வுடன் பதிவு செய்தார். மன்ற பேச்சில்லா நாடகம் இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம் என்பதையும் கருத்தாகச் சொன்னார்.


                மன்ற மூத்த உறுப்பினர் ஆ.செல்வராசு தனது கருத்தாக ஆண்டுக்காண்டு மெருகேறிவரும் மன்றத்தின் செயல் கிராமப்புறப்  பொதுமேடையில் நடத்தப் பட்டால் இன்னும் மன்றத்தின் செயல்பாடுகள் பரவும் என்பதைக் கூறினார்.


              நிறைவாக மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா, இவ்வாண்டு முப்பெரும் விழா சிறப்பாக நடக்க ஒத்துழைத்த அனைத்து மன்ற உறுப்பினர்களுக்கும்,  சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் , முதுநிலை அறிவியலறிஞர் திரு.இரா.இராஜ்குமார். பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்ற உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி, த.மு.எ.க.ச மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்து நிலவன், மருத்துவர் இராமதாசு ஆகியோர்க்கும் , முன்னிலையேற்ற சுப்பிரமணிய காடுவெட்டியார், ஆர் ஏ.குமாரசாமி ஆகியோர்க்கும் , கேளாமலேயே நன்கொடையளித்த பொது நன்கொடை யாளர்களுக்கும், குறிப்பாக ஆண்டுதோறும் கட்டணமில்லாது அரங்கத்தினை வழங்கிவரும் எஸ்.வி.எஸ்.செந்தில் ஆண்டவர், விழாவிற்கு வருகை தந்தவர்க்கெல்லாம் சிற்றுண்டி வழங்கிய திரு சண்முக பழனியப்பன், இனிப்புகள் வழங்கிய அறமனச் செம்மல் சீனு .சின்னப்பா, ரொட்டிகள் வழங்கிய கோடீசுவரா அழகப்பன், விருதுகளுக்கு நிதி யளித்த எஸ.வி.எஸ். செயக்குமார். முரு.வைரமாணிக்கம்,  பரப்புரைக்கு உதவிய வயி.ச.வெங்கடாசலம். மருத்துவர் ச.இராமதாசு, ப.இராமசாமி, ஆர்.ஏ.குமாரசாமி. சுந்தரமூர்த்தி ஆகியோர்க்கும், பொருளாலும், உடலுழைப்பாலும், நிதியாலும் உதவிய மன்ற உறுப்பினர்களுக்கும் ஒளிப்படம் எடுத்த ஸ்டீபன், காணொளிப் பதிவு செய்த மரகதவள்ளி அறக்கட்டளை அறங்காவலர் பொன்.க.மதிவாணன், விருதுபெற்ற மாணவர்கள், பெற்றோர், தலைமையாசிரியர்கள், விழாவிற்கு வந்து சிறப்புச் செய்த புதுக்கோட்டையில் பல்வேறு இலக்கிய , அறிவியல். கலைஇலக்கிய அமைப்பினைச் சேர்ந்தவர்களுக்கும். நிகழ்ச்சியினை நாளேடுகளில் வெளியிட்டு உதவிய நாளேட்டுச் செய்தியாளர்களுக்கும், திருச்சி அகில இந்திய வானொலி, காவல்துறை ஆகியோர்க்கு அமைப்பின் சார்பான நன்றிகளைப் பதிவு செய்தார்.


             அடுத்து வரும் நிகழ்வுகளில் இன்னும் ஆற்றலோடு உறுப்பினர்கள் பணிகளைப் பகிர்ந்து சிறப்பிக்க வேண்டுகோளையும் வைத்தார்.


              பொருளாளர் வரவு செலவு அறிக்கை அளிக்கப் பட்டு மன்றத்தினரின் ஒப்புதல் பெறப்பட்டது.


              அ.பெ.கா.அமைப்பினர் கோரிய நாடகத்தில் நடிக்க மன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கோரப்பட்டது. நாடக வடிவமைப்பு, உரையாடல், பங்குபெறுவோர் எண்ணிக்கை உரியவர்களிடமிருந்து பெறப்பட்டதும் உறுப்பினர்களின் ஒப்புதலை உறுதிசெய்ய முடிவாற்றப் பட்டது.


             நிறைவாக மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.   


திங்கள், 22 ஜூலை, 2013




மணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது ஆண்டு முப்பெரும் விருதுகள் வழங்கும் விழாவில்  சில காட்சிகள்.

மணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளை 49 ஆவது ஆண்டு முப்பெரும் விழா.

                          மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது முப்பெரும் விழா திருவள்ளுவர் ஆண்டு 2044 கடகம் 4 காரிக்கிழமை    ( 20.07.2013 ) அன்று மாலை 6.00 மணிக்கு, புதுக்கோட்டை எஸ்.வி.எஸ். சீதையம்மாள் திருமண அரங்கில் நடைபெற்றது.  கவிஞர்கள் செ.சுவாதி, மு.கீதா ஆகியோர் விழாவிற்கு வந்தவர்களை இனிதே வரவேற்றனர்.
மன்றத்தின் உறுப்பினர்கள் ஆ.குமார், ச.கோகர்ணேசன் ஆகியோர் விருதாளர் வருகையினைப் பதிவு செய்தனர். 
                     
                    விழாவின் கலைநிகழ்வாக மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் அவர்களின் இருகுரல் இன்னிசை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாற்காலி என்னும் பேச்சில்லா குறு நாடகம் கவிஞர் நீலா தலைமையில் நடைபெற்றது. நாடகத்தில் கவிஞர் செ.சுவாதி, ஆ.குமார், கவிஞர் கண்ணதாசன், வள்ளியப்பன், மணிகண்டன், ஜெய்சங்கர் ஆகியோர் சிறப்பாக நடித்தனர்.

                  முப்பெரும் விழாவின் முதல் நிகழ்வாக “ சாதனையாளர்களுக்குப் பாராட்டு“ விழாவிற்கு மணிமன்றத் தலைவர் பொன.பாலசுப்பிரமணியன் தலைமை ஏற்றார். மாணவச் சாதனையாளர்கள் மேடைக்கு அழைத்து சிறப்பிடத்தில் அமர்த்தப் பட்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடிய   மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா  வரவேற்புரையினை ஆற்றினார். விழாவிற்கு தமிழிசைச் சங்கத் தலைவர் திரு சுப்பிரமணிய காடுவெட்டியார், ஆர்.ஏ.குமாரசாமி ஆகியோர்    முன்னி லை யேற்றனர்.

                   நிகழ்ச்சியினை கவிஞர் ரெ.சு.காசிநாதன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
ஆண்டறிக்கையினை புலவர் மு.பாலசுப்பிரமணியன் அளித்தார்.சிறப்பு விருந்தினர்களுக்கு மன்றச் செயற்குழுவினர் நூல்களை அன்பளித்துச் சிறப்புச் செய்தனர்.

                  தலைவர் உரையினைத் தொடர்ந்து... வாரணாசியில் நடைபெற்ற தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்  “வெப்ப மேம்பாட்டில் சாண எருவாட்டி“ என்னும் ஆய்வினை அளித்து இளம் விஞ்ஞானியாகச் சிறப்புப் பெற்ற தச்சன்குறிச்சி தூயமரியன்னைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஆ.அகஸ்டாவின்  சாதனைகளையும், வேளாண் தொழிலுக்கு புதிய கண்டுபிடிப்பான ” தானியங்கி நீரிறைக்கும் பொறி”    யினைக் கண்டுபிடித்த அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ச.மணிவண்ணன், இரா.சதீஸ்குமார், ஆறு.பாலாஜி ஆகியோரை மரகதவள்ளி அறக்கட்டளையின் அறங்காவலர் பொன்.க.மதிவாணன் அறிமுகம் செய்தார்.
பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புக் கருவியினை அப்பொறியியல் மாணவர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தது சிறப்பாக இருந்தது.  

                 சாதனையாளர் விருதுகளை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன்அவர்கள்   வழங்கினார் . சாதனையாளர்களைக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வாழ்த்தி உரையாற்றினார்.

                அவர் தனதுரையில் மன்றத்தின் தொடர்ந்த இப்பணியினைப் பாராட்டினார். வளரும் சாதனையாளர்களுக்கு முதுகில் செய்ய வேண்டிய ஒரே வேலை அவர்களைத் தட்டிக் கொடுப்பதுதான். சரியான களம் கிடைக்குமானால் நிறையச் சாதனையாளர்கள் உருவாவார்கள்..  போதிப்பதிலும் சாதிக்க வைப்பதே சமுதாய, நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னது சிறப்பாக இருந்தது.

                  அதனையடுத்து இந்தியக் குடியரசுத் தலைவரிடம் “செம்மொழி இளம் தமிழறிஞர் விருது” பெற்ற புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு.மாதவன் அவர்களை கவிஞர் ஆர்.நீலா அறிமுகம் செய்தார். அவருக்கான சாதனை விருதினை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மூத்த அறிவியல் அறிஞர்                                             திரு இரா.இராஜ்குமார் அவர்கள்  வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

                  இரண்டாவது நிகழ்வாக புதுக்கோட்டை மாவட்ட அளவில் 10,12 வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர் எண்மர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களை வாழ்த்தி மருத்துவர் ச.இராமதாசு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் முதல் மூன்று மாணவர்களுக்கான விருதுகளை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் வழங்கினார். த.மு.எ.க.ச . மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன்  முழுத்தேர்ச்சி பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களைப் பாராட்டியும், மாணவர் திறமையினை மதிப்பெண்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை அவர்களை மாண்புள்ள சமூகச் சிந்தனையாளர்களாக உருவாக்கும் வாழ்க்கைக் கல்வியே இன்றியமையாதது என்னும் கருத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.

                விழாவின் நிறைவுரையாக முதன்மைக் கல்வி அலுவலர் அரசுப் பள்ளி மாணவர், ஆசிரியர் சிறப்புத்  திறன்களையும்  கடந்த ஆண்டினைவிட இவ்வாண்டு புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ள நிலைமையினையும் அதிக முழுத்தேர்ச்சிப் பள்ளிகள் அதற்குச் சான்றாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். அவர் தனது கல்விப் பயணத்தின் பட்டறிவினை எடுத்துச் சொல்லி ஒவ்வொருவரின் உயர்வு அவரவர் முனைப்பு ஈடுபாட்டில்தான் இருக்கிறது. எல்லா மாணவரிடத்தும் திறன்கள் அடங்கிக்கிடக்கின்றன அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப் பட்டால் எல்லா நிலைகளிலும் உயர்வார்கள் ... இதில்  பள்ளி வேறுபாடுகள் இல்லை என்பதைப் பதிவு செய்தார்.

               அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகரளவு 17 பள்ளிகளைச் சேர்ந்த 22 முதல் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை தங்கள் பெற்றோருடன் மேடைக்கு வந்து மாணவர்கள் பெற்றது சிறப்பாக இருந்தது. விருதுகளோடு பாராட்டுச் சான்றிதழ், நூல்களும் விருதாளர்களுக்கு வழங்கப் பட்டது. அரங்க ஆளுமையினை நா.செந்தில்பாண்டியன்,சங்கர நாராயணன் கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் செம்மையாய்ச் செய்தனர்.

              மூன்றாவது நிகழ்வாக... புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் மேல்நிலையில் முழுத்தேர்ச்சி பெற்ற கீரமங்கலம், கொத்தமங்கலம், வெண்ணாவல்குடி, கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும்,  இடைநிலைத்தேர்வுகளில் முழுத்தேர்ச்சி பெற்ற குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம், கீழாநிலைக்கோட்டை, மரமடக்கி, பள்ளத்திவிடுதி, சுனையக்காடு, ஆயிங்குடி தெற்கு, தெம்மாவுர், எஸ்.குளவாய்ப்பட்டி, பொன்னன்விடுதி, மோலுடையான்பட்டி, கிருஷ்ணாஜிப் பட்டினம், மதியநல்லூர், வெள்ளாளவிடுதி, திருமணஞ்சேரி, சூரன்விடுதி, கே.ராசியமங்களம், மேலூர், திருவப்புர் ஆகிய 23 பள்ளிகளுக்கான   “முழுத்தேர்ச்சி விருது“களை முதன்மைக் கல்வி அலுவலர் வழங்க அவ்வப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பெற்றுமகிழ்ந்தனர்.

             முதல் மாணவர்களை மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தரும், முழுத்தேர்ச்சிப் பள்ளிகளை மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரனும் அறிமுகம் செய்தனர்.

           விழா பற்றிய பின்னூட்டக்கருத்தினை கொத்தமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வழங்கினார்.

            விருது பெற்றவர் சார்பாக முனைவர் சு.மாதவன் ஏற்புரை வழங்கினார்.
மன்றத் துணைத் தலைவர் நா.செந்தில்பாண்டியன் நன்றியுரையாற்றினார்.

            வருகைபுரிந்த அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. விருது பெற்றோர்க்கு பதிவின்போது அடையாள அட்டையும்  ரொட்டிப் பொட்டலமும் வழங்கப் பட்டது.
விழா இரவு 9.15க்கு நிறைவுற்றது. தொலைவிலிருந்து விருதுபெற வந்தவர்களுக்குப் பயணப்படி வழங்கப் பட்டது.

             அரங்கிலிருந்த அனைவருக்கும் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன் அவர்கள் சார்பாக சிற்றுண்டி வழங்கப்பட்டது. விருந்தோம்பல் பணியினை வெ.பரமசிவம், சு.இராசேந்திரன், கவிஞர்கள் செ.சுவாதி, கீதா, வள்ளியப்பன், சங்கரநாராயணன், இளந்தொண்டர்கள் சொ.இளங்கோ, கு.தமிழ்மணி  ஆகியோர்  கனிவுடன் ஆற்றினர்.

           விருதோடு விருந்தும் உண்டு மகிழ்வோடு திரும்பினர் அனைவரும்.

ஞாயிறு, 30 ஜூன், 2013

மணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா - சிறப்புக் கூட்டம்

               30.06.2013 அன்று முற்பகல் மணிமன்றத்தின் சிறப்புக் கூட்டம் மன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது. மன்றச் செயலாளர் திரு சிதம்பர ஈசுவரன் வரவேற்புரையாற்றினார்.
           
               49 ஆவது ஆண்டுவிழா தொடர்பாக கடந்த கூட்டத்தில் வடிவமைக்கப் பட்ட  தீர்மானங்கள் இறுதிவடிவம் பெற்றன. 

 விழாவில் முதல் மாணவர் விருது வழங்க மாவட்ட உயர் அலுவலர்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையும். மாணவச் சாதனையாளர்களைப் பாராட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ராஜ்குமார் அவர்களையும், வாழ்த்துரைக்க முத்துநிலவன், தங்கம்மூர்த்தி ஆகியோரையும் அழைக்க உறுதிசெய்யப் பட்டது.
              
               மன்ற உறுப்பினர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி கவிஞர் நீலா இன்னும் மூன்று நாள்களுக்குள் உறுதி செய்ய வில்லையெனில்  சிதம்பர ஈசுவரன் அவர்களின் இருகுரல் இன்னிசை நிகழ்ச்சி உறுதிப்படுத்த தீர்மானிக்கப் பட்டது.

            மன்ற உறுப்பினர் வீ.கே.கஸ்தூரிநாதன் ( எ ) வீ.கருப்பையன் 28.06.2013 அன்று மாமன்னர் கல்லூரியி்ல் நடைபெற்ற பொது வாய்மொழித் தேர்வி்ல் “ மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள்“ என்னும் ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டத்திற்கு பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்குப் பரிந்துரைக்கப் பட்டதைப் பாராட்டி அவருக்கு நினைவு நூல் பரிசளிக்கப் பட்டது.
      
           அண்மையி்ல் புதுக்கோட்டை விசயரெகுநாதபுரம் பள்ளி மாணவர்கள் 7 பேர் ஊர்தி விபத்தில் மரணமடைந்ததற்கு மன்றம் இரங்கலைத் தெரிவிக்கிறது.

           உத்தர்கண்டில் இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தோர்க்கும், அங்கு மீட்புப் பணியின் போது இன்னுயிர் நீத்த மதுரை விமானி பிரவீன் அவர்களுக்கும் மன்றம் தனது இரங்கலைத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

         நிறைவாக மன்றத் துணைச் செயலாளர் நா.செந்தில்பாண்டியன் நன்றிகூற கூட்டம் நிறைவுற்றது.

ஞாயிறு, 2 ஜூன், 2013

மணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா-திட்டமிடல் கூட்டம்

                 02.06.2013 மாலை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது ஆண்டு திட்டமிடல் கூட்டம் புதுக்கோட்டையில் மன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிர மணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.
                 கவிஞர் ஆர்.நீலா வரவேற்புரையாற்றினார்.
தலைவர் 49ஆவது ஆண்டுவிழா பற்றிய முன்னுரை வழங்கினார். மன்ற நிருவனர் புலவர் பொன்.கருப்பையா ஆண்டுவிழாத் திட்டங்களை முன்வைத்து விளக்கினார். கருத்துகள் மீதான விவாதங்களுக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.
          1 .மன்ற 49 ஆவது ஆண்டுவிழாவினை எதிர்வரும் 20.07.2013 அன்று வழக்கம்போல் எஸ்.வி.எஸ்.சீதையம்மாள் திருமண அரங்கில் நடத்துவது.
         2. ஆண்டுவிழாவில் 2013 மேல்நிலை, இடைநிலை அரசு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அரசு, அரசுநிதிஉதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவது.
         3.நகர எல்லைக்குட்பட்ட அரசு, அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை, இடைநிலை 2013 அரசு பொதுத்தேர்வுகளில்  பள்ளி வாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவது.
         4.புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், 2013 அரசு பொதுத்தேர்வுகளில் . மேல்நிலை,
இடைநிலைத் தேர்வுகளில்  முழுத்தேர்ச்சி பெற்ற அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குவது.
         5.சண்முகநாதன் பொறியியல் கல்லூரி புதிய கண்டுபிடிப்புக்கான மாணவர் சாதனையாளர் மூவர்க்கும், தச்சன்குறிச்சி இளம் விஞ்ஞானி மாணவர் ஒருவருக்கும் விருதுகள் வழங்குவது.
         6. செம்மொழி இளம் தமிழறிஞர் விருது  பெற்ற மாமன்னர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு. மாதவன் அவர்களைப் பாராட்டி விருது வழங்குவது.
         7.ஆண்டுவிழாவில் கவிஞர் ஆர் நீலா ஒருங்கிணைப்பில் மன்ற உறுப்பினர் எழுவர் பங்குபெறும் கல்வி விழிப்புணர்வு நாடகம் (30 நிமிடங்கள்) மற்றும் சிதம்பர ஈசுவரன் பங்கேற்கும் இருகுரல் இன்னிசை நிகழ்ச்சியை(15 நிமிடம்) நடத்துவது.
        8. ஆண்டுவிழாச் செலவினங்களுக்கு மரகதவள்ளி அறக்கட்டளையின் பங்களிப்பு நிதி( ரூ5000) உடன் மன்ற உறுப்பினர்கள் தலா ரூ 1000 வழங்குவது என முடிவாற்றப்பட்டது.
         9.விழாப் பணிக்குழு கடந்த ஆண்டு போலவே இவ்வாண்டும் செயல்படுவது.
       10.விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அரசு உயர் அலுவலர், சமூக ஆர்வலர் ஐவர் ஆகியோரை அழைப்பது.

ஊரக வளர்ச்சி வங்கி இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மன்ற உறுப்பினர்                                   திரு நா. மணிகண்டன் அவர்கள் பாராட்டப் பட்டார்.
நிறைவில் மன்றச் செயலாளர் திரு.சித.ஈசுவரன் நன்றி கூறினார்.